ஏர்டெல் பெயரில் அதிர்ச்சி மோசடி! வாட்ஸ்அப் யூசர்களை குறிவைக்கும் ஹேக்கர்ஸ்!

 
1

 "ஏர்டெல் - தீபாவளி கா தயோஹார்" என்ற பெயரில் ரூ.2,000 தீபாவளி ரீசார்ஜ், ரூ.8,000 மாதாந்திர போனஸ் அல்லது அமேசான், ஃபிளிப்கார்ட் குலுக்கல் கூப்பன்களை வழங்குவதாக வாட்ஸ்அப் வாயிலாக தகவல்கள் வெளியாகின.ஆனால் இதுபோன்ற தகவல்கள் முற்றிலும் போலியானவை. ஏர்டெல் இணையதளத்திலோ, ஏர்டெல் தேங்க்ஸ் ஆப்பிலோ அதுபோன்று எந்தவிதமான சலுகைகளும் குறிப்பிடப்படவில்லை. எனவே, மக்கள் உஷாராக இருப்பது அவசியம்.

தீபாவளிப் பண்டிகைக் காலத்தில் மக்களைக் குறிவைத்து வாட்ஸ்அப் மற்றும் சமூக வலைதளங்களில் புதிய சைபர் மோசடி ஒன்று வேகமாகப் பரவி வருகிறது. ஏர்டெல் நிறுவனம் சார்பில் ரூ.2,000 "தீபாவளிப் பரிசு" வழங்கப்படுவதாக ஒரு போலிச் செய்தி சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.

மோசடி நடக்கும் விதம்:

  • போலி லிங்குகள்: அந்தச் செய்தியில் உள்ள இணைப்பை (Link) கிளிக் செய்தால் .buzz அல்லது omtav.buzz போன்ற ஏர்டெல்லின் அதிகாரப்பூர்வமற்ற போலி இணையதளப் பக்கத்திற்கு அது நம்மை அழைத்துச் செல்லும்.

  • நம்பகத்தன்மை நாடகம்: பொதுமக்கள் எளிதில் நம்ப வேண்டும் என்பதற்காக, "எனக்குப் பணம் கிடைத்துவிட்டது" போன்ற போலிப் பயனர்களின் கருத்துக்களும் அதில் இடம்பெற்றிருக்கும்.

  • பகிரும் நிபந்தனை: பரிசைப் பெறுவதற்கு உங்கள் செல்போன் எண்ணை உள்ளிட்டு, அந்தச் செய்தியை குறைந்தது 5 முதல் 10 வாட்ஸ்அப் குழுக்களுக்குப் பகிர வேண்டும் என நிபந்தனை விதிக்கப்படும். இதுவே இந்த மோசடி காட்டுத்தீ போலப் பரவ முக்கியக் காரணமாகும்.

நடக்கும் ஆபத்துகள் என்ன? பயனர்கள் தங்கள் விவரங்களைச் சமர்ப்பித்தவுடன், ஹேக்கர்கள் வாட்ஸ்அப் கணக்கை எளிதில் கைப்பற்றி விடுவார்கள். மேலும், UPI செயலிகளை முடக்குவதுடன், வங்கி ஓடிபி (OTP) எண்களைத் திருடி வங்கி கணக்கில் உள்ள பணத்தை முற்றிலுமாக அபேஸ் செய்ய வாய்ப்புள்ளது.

எச்சரிக்கையாக இருக்கத் தொலைத்தொடர்புத் துறை அறிவுறுத்தல்:

  • இதுபோன்ற அடையாளம் தெரியாத லிங்குகளை எக்காரணம் கொண்டும் கிளிக் செய்ய வேண்டாம்; உடனடியாக டெலிட் செய்துவிடுங்கள்.

  • ஏர்டெல் நிறுவனத்தின் எந்தவொரு சலுகையாக இருந்தாலும், அதனை 'Airtel Thanks' செயலி அல்லது அதிகாரப்பூர்வ வலைதளத்தில் மட்டுமே உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

  • இலவசப் பரிசுகள் என்ற பெயரில் வரும் ஆபத்தான வலையில் சிக்காமல் உஷாராக இருங்கள்!