அதிர்வு இல்லாத அதிவேகப் பயணம்! 180 கி.மீ வேகத்தில் சென்றாலும் அசையாத தண்ணீர் டம்ளர்!
இந்திய ரயில்வேயின் நவீன அடையாளமாகத் திகழும் 'வந்தே பாரத்' ரயில்கள் தற்போது நாடு முழுவதும் 170-க்கும் மேற்பட்ட வழித்தடங்களில் வெற்றிகரமாக இயக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் சென்னை, கோவை, நெல்லை மற்றும் கன்னியாகுமரி போன்ற முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் இந்த ரயில்கள் சிறந்த சேவையை வழங்கி வருகின்றன. தற்போது பயன்பாட்டில் உள்ள ரயில்களில் அமரும் வசதி (Chair Car) மட்டுமே உள்ள நிலையில், பயணிகளின் பெரும் வரவேற்பை முன்னிட்டு நீண்ட தூர இரவுப் பயணங்களுக்காகப் படுக்கை வசதி கொண்ட 'வந்தே பாரத் ஸ்லீப்பர்' ரயில்களை அறிமுகம் செய்ய ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
இந்த நவீன படுக்கை வசதி கொண்ட ரயில் பெட்டிகள், பெங்களூருவில் உள்ள பி.இ.எம்.எல். (BEML) தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டுள்ளன. இதற்கான விரிவான வடிவமைப்பைச் சென்னையில் உள்ள ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தொழிற்சாலை (ICF) வழங்கியுள்ளது. நீண்ட தூரப் பயணங்களைக் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த ரயிலில், உயர்தர ஏசி படுக்கை வசதிகள், ரயில்கள் மோதிக்கொள்வதைத் தவிர்க்கும் உள்நாட்டிலேயே உருவான 'கவச்' (Kavach) தொழில்நுட்பம் மற்றும் தானியங்கி கதவுகள் போன்ற உலகத்தரம் வாய்ந்த பாதுகாப்பு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
தற்போது முழுமையாகத் தயாரிக்கப்பட்டுள்ள இரண்டு ஸ்லீப்பர் ரயில்கள் பல்வேறு கட்ட சோதனை ஓட்டங்களில் உள்ளன. சமீபத்தில் ராஜஸ்தான் மாநிலத்தின் கோட்டா முதல் நாக்டா வரையிலான பாதையில் அதிவேக சோதனை ஓட்டம் நடைபெற்றது. இந்தச் சோதனையின் போது ரயிலின் நிலைத்தன்மையைச் (Stability) சோதிக்க ஒரு சுவாரஸ்யமான முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ரயிலின் உள்ளே இருந்த மேஜையில் கண்ணாடி டம்ளர்களில் தண்ணீர் நிரப்பி வைக்கப்பட்டு, அதன் வேகம் கண்காணிக்கப்பட்டது.
சோதனையின் போது ரயில் மணிக்கு 180 கி.மீ. வேகத்தில் சீறிப் பாய்ந்த போதிலும், மேஜையில் வைக்கப்பட்டிருந்த தண்ணீர் டம்ளர்கள் சிறிதும் அசையாமல் இருந்தது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. அதில் இருந்த தண்ணீர் மிக லேசான சலனத்தை மட்டுமே காட்டியது, ரயிலின் அதிர்வு குறைந்த தொழில்நுட்பத்தை உறுதி செய்தது. இந்த வீடியோவை மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் சமூக வலைதளங்களில் பகிர்ந்து, வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலின் உயர் தொழில்நுட்பம் மற்றும் பயணிகளுக்குக் கிடைக்கப்போகும் வசதியான பயண அனுபவத்தைப் பெருமையுடன் சுட்டிக்காட்டியுள்ளார்.


