தவெக-வினர் ஷாக்..! சோளிங்கர் தவெக எம்.எல்.ஏ. கபில் மீது வழக்குப்பதிவு...!!

 
1

தவெக எம்.எல்.ஏ கபில் மற்றும் அவரது சகோதரர் தனஞ்செழியன் உள்ளிட்டோர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

சோளிங்கரில், யூடியூபர் மற்றும் செய்தியாளர்கள் தாக்கப்பட்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு அரசியல் மற்றும் ஊடக வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக தமிழக வெற்றிக் கழகத்தின் சோளிங்கர் தொகுதி எம்.எல்.ஏ. கபில் மீது ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் (எஸ்.பி.) புகார் அளிக்கப்பட்டது.

நடந்தது என்ன : 

தகவலின்படி, சோளிங்கரில் உள்ள ஒரு திரையரங்கில் முதல்வர் விஜய் நடித்த ஜனநாயகன் திரைப்படத்தை பார்த்துவிட்டு வெளியே வந்த எம்.எல்.ஏ. கபிலிடம், யூடியூபர் சிவா திரைப்படம் குறித்து கருத்து கேட்க மைக்கை நீட்டியதாக கூறப்படுகிறது. அப்போது கபில் அவரை தாக்க முயன்றதாக கூறப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதுடன், அந்த சம்பவம் தொடர்பான செய்திகள் வெளியாகின.

இதனைத் தொடர்ந்து, யூடியூபர் சிவாவை தேடி கபிலும், அவரது ஆதரவாளர்களும் சென்றதாகவும், பின்னர் சிவாவை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று தாக்கியதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து செய்தி சேகரிக்கச் சென்ற நாளிதழ் நிருபர்கள் அரங்கநாதன் மற்றும் கல்யாணசுந்தரமும் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

சம்பவ இடத்தில் பொதுமக்கள் திரண்டதைத் தொடர்ந்து சோளிங்கர் போலீசார் விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டதாக கூறப்படுகிறது. மேலும், சம்பவத்தின் போது நிருபர்களின் செல்போனில் பதிவு செய்யப்பட்டிருந்த வீடியோக்கள் காவல்துறை அதிகாரியால் அழிக்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தாக்குதலில் காயமடைந்த யூடியூபர் மற்றும் இரு செய்தியாளர்களும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.

இந்த சம்பவத்தை கண்டித்து பத்திரிகையாளர்கள் மற்றும் அவர்களது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், பாதிக்கப்பட்டவர்கள் சோளிங்கர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததுடன், ராணிப்பேட்டை மாவட்ட எஸ்.பி. சிபினையும் நேரில் சந்தித்து நடவடிக்கை கோரி மனு வழங்கினர்.

இந்த விவகாரம் தொடர்பாக பத்திரிகையாளர்கள் சங்கங்களும் கண்டனம் தெரிவித்தனர்.

இந்தநிலையில், செய்தியாளர்களை தாக்கிய வழக்கில் 21 நாட்களுக்குப் பிறகு சோளிங்கர் தொகுதி தவெக எம்.எல்.ஏ. கபில் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கபில் மற்றும் அவரது சகோதரர் தனஞ்செழியன் மற்றும் சிலர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.