திமுகவினருக்கு ஷாக்..! 15 வருட திமுக - காங்கிரஸ் கூட்டணி முறிந்தது..!
தவெகவிற்கு ஆட்சியமைக்க காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியாகியுள்ள கடிதத்தில், "தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், தமிழகத்தில் ஆட்சி அமைக்க ஆதரவு தருமாறு இந்திய தேசிய காங்கிரஸிடம் அதிகாரப்பூர்வமாகக் கேட்டுக்கொண்டார். தமிழக மக்கள், குறிப்பாக இளைஞர்கள், மதச்சார்பற்ற மற்றும் மக்கள் நலன் காக்கும் ஒரு மாற்றத்திற்காகத் தங்களின் தெளிவான தீர்ப்பை வழங்கியுள்ளனர். விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதே மக்களின் விருப்பமாக உள்ளது.
மதச்சார்பின்மை மற்றும் சமூக நலக் கொள்கைகளுக்காகத் தொடங்கப்பட்ட காங்கிரஸ் கட்சி, மக்களின் இந்தத் தீர்ப்பை மதிப்பதைக் கடமையாகக் கருதுகிறது. அதன் அடிப்படையில், தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைக்கத் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியும், காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களும் முழு ஆதரவை வழங்க முடிவு செய்துள்ளனர்.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மீது நம்பிக்கை இல்லாத வகுப்புவாத சக்திகளை இந்தக் கூட்டணியில் சேர்க்கக் கூடாது என்ற நிபந்தனையின் அடிப்படையில் எங்களது ஆதரவு அமையும். தமிழக வெற்றிக் கழகம் மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் இடையிலான இந்தக் கூட்டணி, தந்தை பெரியாரின் சமூக நீதிச் சிந்தனைகள் மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் அரசியலமைப்புச் சட்டக் கொள்கைகளில் உறுதியான அர்ப்பணிப்புடன், பெருந்தலைவர் காமராஜரின் பொற்கால ஆட்சியைத் தமிழகத்தில் மீண்டும் கொண்டு வர வரும் காலங்களிலும், தசாப்தங்களிலும் பாடுபடும்.
இந்த உடன்பாடு வெறும் ஆட்சி அமைப்பதோடு மட்டுமல்லாமல், எதிர்காலத்தில் வரும் உள்ளாட்சித் தேர்தல், மாநிலங்களவை தேர்தல் மற்றும் 2029 நாடாளுமன்றத் தேர்தல்களுக்கும் தொடரும். விஜய் மற்றும் ராகுல் காந்தி ஆகிய இருவரும் இணைந்து, தமிழக மக்களின் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை மதித்து, இளைஞர்களின் கனவுகளையும் வாக்குறுதிகளையும் நிறைவேற்ற உறுதிபூண்டுள்ளனர்." என்று கூறப்பட்டுள்ளது. இதன்மூலம் 11 ஆண்டுகள் நீடித்து வந்த திமுக காங்கிரஸ் கூட்டணி முறிந்தது.

