கோவில்பட்டி கடலைமிட்டாய் பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்! இன்று முதல் விலை கிடு கிடு உயர்வு..!
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகள் வானம் பார்த்த பூமியாகும். சுத்த கரிசல் மண்ணில் விளைவிக்கப்படும் நிலக்கடலைகளுக்கு எப்போதுமே தனி மவுசு உண்டு. இயற்கையாகவே இனிப்பு சுவையுடன் உள்ள இந்த நிலக்கடலைகளை கொண்டு தயாரிக்கப்படும் கடலைமிட்டாய்கள் உலக பிரசித்தி பெற்றதாகும்.
இந்த கடலை மிட்டாய்கள் சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, மாலத்தீவு உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. மேலும், இந்தியா முழுவதும் கடலை மிட்டாய் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
இந்நிலையில், கடலை மிட்டாய் தயாரிப்பில் முக்கிய மூலப்பொருளான நிலக்கடலையின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ள நிலையில், வெல்லம், ஏலக்காய் மற்றும் பேக்கிங் பொருட்களின் விலையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் உற்பத்திச் செலவு அதிகரித்து, உற்பத்தியாளர்கள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
இதையடுத்து, கோவில்பட்டி கடலை மிட்டாய் உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் நலச்சங்கத்தினர் ஆலோசனை நடத்தி, விலையை 25 சதவீதம் உயர்த்த முடிவு செய்தனர்.
அதன்படி, இன்று முதல் ஒரு கிலோ கடலை மிட்டாய் 220 முதல் 320 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.இதன்படி ஒரு கிலோ ரூ.220க்கு விற்பனை செய்யப்பட்ட கடலைமிட்டாய், தற்போது ரூ.270க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஸ்ரீவில்லிப்புத்தூர் பால்கோவைவை தொடர்ந்து கோவில்பட்டி கடலை மிட்டாய் விலையும் அதிகரித்துள்ளது.

