தருமபுரியில் அதிர்ச்சி..! கருவிலே இறந்த இரட்டை சிசுக்கள்..!

தர்மபுரியை சேர்ந்தவர்கள் அருண்குமார் - நந்தினி தம்பதி. நந்தினியை பிரசவத்திற்காக தருமபுரி பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்திருந்தனர்.
இந்த நிலையில் செவிலியர்கள் செலுத்திய ஊசி காரணமாக திடீரென நந்தினிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு மயக்கம் அடைந்து கீழே விழுந்ததாக கூறப்படுகிறது. உடனடியாக தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் குழந்தைகளுக்கும், தாய்க்கும் மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளதாகவும், உடனடியாக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வேண்டும் என கூறி ஆம்புலன்சில் அனுப்பியுள்ளனர்.
பின்னர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பரிசோதித்த மருத்துவர், நந்தினியின் கருவில் இரட்டை குழந்தைகள் இருந்ததாகவும், அவை உயிரிழந்துள்ளதாக உறவினர்களிடம் தெரிவித்தனர். இதனையடுத்து உறவினர்கள் அந்த தனியார் மருத்துவமனையை முற்றுகையிட்டும், சாலையில் அமர்ந்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய நந்தியின் கணவா் அருண்குமார், ''கடந்த ஆண்டு ஏழாவது மாதம் எனது மனைவி கருவுற்றார். தனியார் மருத்துவமனையில் மனைவிக்கு பரிசோதனை செய்த போது இரண்டு துடிப்பு உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தார்கள். இதனால் நாங்கள் மகிழ்ச்சி அடைந்தோம். மனைவியை மிகவும் பாதுகாப்பாக பார்த்துக் கொண்டோம். நான்காவது மாதம் உடல்நிலை பிரச்சனை ஏற்படவே மருத்துவமனைக்கு அழைத்து வந்தோம். அப்பொழுது செலுத்திய ஊசி காரணமாக அவருக்கு திடீர் உடல்நிலை குறைவு ஏற்பட்டது. அப்பொழுது மருத்துவர்கள் குறிப்பிட்ட மருந்து பயன்படுத்தி போடப்படும் ஊசி உடலுக்கு ஒத்து வரவில்லை என்று தெரிவித்தார்கள்.
இன்று பிரசவ தேதியை தெரிவித்தார்கள். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகு 'டெஸ்டிங் இன்ஜெக்ஷன்' போடுவதை பார்த்து என் மனைவி இந்த மருந்து எனக்கு ஒத்து வராது என்று தெரிவித்துள்ளார். அதற்குள் செவிலியர் அந்த மருந்தை ஊசி மூலம் செலுத்தி உள்ளார். ஊசி போட்ட உடனே வாந்தி எடுத்து கீழே விழுந்து உள்ளார். உடல்நிலை மோசமான பிறகு தனியார் மருத்துவமனை அவசர அவசரமாக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டனர்.
மருத்துவமனையில் அனுமதித்த போது இரண்டு குழந்தைகளும் இறந்தது எங்களுக்கு தெரிய வந்தது. எங்களை போல மற்றவர்கள் இந்த மருத்துவமனையில் ஏமாறக்கூடாது'' என்றார்.