ஆசிரியர்களுக்கு ஷாக் - TET பாஸ் இல்லனா வேலை கட்
உச்சநீதிமன்ற தீர்ப்பாணையின்படி, இலவச மற்றும் கட்டாயக் கல்வி பெறும் குழந்தைகளின் உரிமைச் சட்டம், 2009 இன் பிரிவு 23 இன் படி, ஆசிரியர் தகுதித் தேர்வில் (TET) தேர்ச்சி பெறுவது ஆசிரியர்களுக்கான குறைந்தபட்ச தகுதிகளில் கட்டாயமான ஒன்று எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இன்னும் இரண்டு ஆண்டுகளுக்குள் (31.08.2028-க்குள்) ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்கள் பணியில் தொடர முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் தொடர்ச்சியாக கடந்த 2025 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற விவரங்களை ஆசிரியர்களின் பணிப்பதிவேட்டில் உரிய பதிவுகள் மேற்கொள்ள வேண்டும் என பார்வை 2-ல் காணும் செயல்முறைகள் வாயிலாக தெரிவிக்கப்பட்டது. தற்போது இவ்வாண்டில் ஜூலை 2026-ல் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்விற்கான தேர்ச்சி முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. அது தொடர்பாக தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் இணையதளத்தில் பதிவிறக்கம் (download) செய்த சான்றினை ஊதியம் பெற்று வழங்கும் அலுவலர் மற்றும் பணிப்பதிவேடு பராமரிக்கும் அலுவலரான வட்டாரக் கல்வி அலுவலருக்கு விண்ணப்பித்து அவ்விண்ணப்பத்தினை பெற்ற வட்டாரக் கல்வி அலுவலர் சார்ந்த ஆசிரியர்கள், ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி பெற்ற (TET- Paper I and Paper II) சான்றின் உண்மைத்தன்மையினை அறியும் பொருட்டு முதன்மைக் கல்வி அலுவலரால் பராமரிக்கப்படும் ஆசிரியர் தேர்வு வாரிய பதிவேட்டுடன் சரிபார்த்து உறுதி செய்தபின்பு தேர்ச்சி பெற்ற விவரத்தினை சார்ந்த ஆசிரியர்களின் பணிப்பதிவேட்டில் பதிவு செய்ய வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்துமாறு மாவட்டக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
பணிப்பதிவேட்டில் பதிவு செய்யப்படுவது குறித்து புகார்களுக்கு இடமளிக்காவகையில் கவனமுடன் செயல்படுமாறும் இப்பணிகள் குறித்து மாவட்டக் கல்வி அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

