இபிஎஸ்-க்கு ஷாக் மேல ஷாக்..! மயிலாடுதுறை மாவட்டத்தில் அடுத்தடுத்து முக்கிய நிர்வாகிகள் ராஜினாமா..!
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா கிடங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜனார்த்தனன். இவர் செம்பனார்கோவில் ஒன்றியகுழு தலைவராகவும், அதிமுகவில் ஒன்றிய செயலாளராகவும் பணியாற்றியுள்ளார். தற்போது அம்மா பேரவை இணைச் செயலாளராக பதவி வகித்து வந்தார்.
இந்நிலையில் அதிமுகவில் உழைப்புக்கு தகுந்த மரியாதை இல்லாததால் கட்சி பொறுப்பில் இருந்து விடைபெறுவதாக அறிவித்துள்ளார்.
இதுகுறித்து கிடங்கல் கிராமத்தில் உள்ள தமது இல்லத்தில் இன்று அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, "கடந்த 1972-ம் ஆண்டு முதல் கட்சிக்காக உழைத்து வருகிறேன். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 2011-ம் ஆண்டு என் உழைப்பை பாராட்டி எம்எல்ஏ சீட்டு கொடுக்கவும் முன்வந்தார். அந்த வாய்ப்புகள் எல்லாம் தட்டி பறிக்கப்பட்டன. பல்வேறு காலகட்டங்களில் கட்சிக்காக கடுமையாக உழைத்திருக்கிறேன். உழைப்புக்கு தகுந்த மரியாதை வழங்கப்படவில்லை” என வேதனையுடன் தெரிவித்தார்.
மேலும், தான் கட்சியை விட்டு விலக அதிமுக நாகை மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான ஒ.எஸ்.மணியன், மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் பவுன்ராஜ் ஆகிய இருவரும்தான் காரணம் என்றும் ஜனார்த்தனன் பகிரங்கமாக குற்றம்சாட்டி உள்ளார்.
இதேபோன்று, சீர்காழி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்ட காரணத்தால் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான வி.பி. பாரதி, அதிமுக மாவட்ட அவைத்தலைவர் பொறுப்பை ராஜினாமா செய்தார். அவரும் முன்னாள் அமைச்சர் ஒ.எஸ்.மணியன் மற்றும் மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் பவுன்ராஜ் ஆகியவர்களின் நடவடிக்கை மீது அதிருப்தி தெரிவித்திருந்தார்.
மேலும், அதிமுக குத்தாலம் வடக்கு ஒன்றிய செயலாளர் வி.ஜி.கே.செந்தில்நாதனும் தமது பதவியை ராஜினாமா செய்துள்ளார். உட்கட்சி பிரச்சனையால் முக்கிய நிர்வாகிகள் அடுத்தத்தடுத்து ராஜினாமா செய்வது மயிலாடுதுறை மாவட்ட அதிமுக அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகி உள்ளது.

