ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணைய தலைவராக சிவதாஸ் மீனா நியமனம்.. அப்போ அடுத்த தலைமை செயலாளர்?
தமிழக அரசின் தலைமை செயலாளராக உள்ள சிவ்தாஸ் மீனா ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணைய தலைவராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த சிவ்தாஸ் மீனா 1989-ம் ஆண்டு ஐஏஎஸ் தேர்ச்சி பெற்று காஞ்சிபுரம் துணை ஆட்சியராக (பயிற்சி) தன் பணியை தொடங்கினார். பின்னர் 1991-ம் ஆண்டு முதல் 1993ம் ஆண்டு வரை கோவில்பட்டி துணை ஆட்சியராகவும், 1993-ம் ஆண்டு முதல் 1996-ம் ஆண்டு வரையில் வேலூர், கோவை மாவட்டங்களில் கூடுதல் ஆட்சியர் அந்தஸ்தில் ஊரக வளர்ச்சி, வருவாய் நிர்வாக செயலாளராகவும் பணியாற்றினார்.
தொடர்ந்து 1998ம் ஆண்டு போக்குவரத்துத்துறை நிர்வாக இயக்குனராக இருந்த சிவ்தாஸ் மீனா நாகப்பட்டினம் மாவட்டத்தின் ஆட்சியராக நியமிக்கப்பட்டார். 3 ஆண்டுகல் நாகப்பட்டினம் ஆட்சியராக பணியாற்றிய நிலையில், 2001ம் ஆண்டு பதிவுத்துறையின் கூடுதல் பதிவாளராக நியமிக்கப்பட்டார். பின்னர் சென்னை குடிநீர் வாரியத்தின் இயக்குநர், உணவுத் துறை, உயர்கல்வித் துறை, வணிக வரித் துறை இணை ஆணையர் என பல துறைகளில் சிவ்தாஸ் மீனா பணியாற்றியுள்ளார்.
2015-ம் ஆண்டு கூட்டுறவு மற்றும் உணவுத் துறையின் முதன்மைச் செயலாளராக நியமிக்கப்பட்ட சிவ்தாஸ் மீனா, 2017-ம் ஆண்டு மத்திய அரசுப் பணிக்கு மாற்றப்பட்டதோடு, வீட்டு வசதித் துறை கூடுதல் செயலாளராகவும், மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராகவும் பணியாற்றினார். இதனையடுத்து 2021 திமுக ஆட்சிக்கு வந்த பிறகு மீண்டும் தமிழகப் பணிக்கு அழைத்துவரப்பட்ட சிவ்தாஸ் மீனா, கூடுதல் தலைமைச் செயலாளர் அந்தஸ்தில் நகராட்சி நிர்வாகத் துறையின் முதன்மைச் செயலாளராக பணியாற்றி வந்தார்.
பின்னர் முன்னாள் தலைமை செயலாளர் இறையன்பு பணிஓய்வு பெற்றதை அடுத்து, இவர் 2023 ஜுன் மாதம் தமிழகத்தின் தலைமைச் செயலராக நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் தற்போது அவர் ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து தமிழ்நாடு அரசின் புதிய தலைமை செயலாளராக யார் நியமிக்கப்படுவார்கள் என்கிற கேள்வி எழுந்துள்ளது. அதேநேரம் 1991-ம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியான நா.முருகானந்தம் நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.