“கருணாநிதியை வீட்டு சிறையில் வைத்து கட்சியை கைப்பற்றிய ஸ்டாலின்”- இபிஎஸ் விமர்சனத்திற்கு சண்முகம் கண்டனம்

 
சண்முகம் எடப்பாடி பழனிசாமி

மறைந்த திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி குறித்து எடப்பாடி பழனிச்சாமி அவதூறு பரப்புவதற்கு  மார்க்சிஸ்ட் மாநிலச் செயலர் சண்முகம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

 பத்து நாட்களாக போராட்டம் நடத்தி வரும் தூய்மை பணியாளர்கள் போராட்டம் பேச்சு வார்த்தை மூலம் முடிவுக்கு கொண்டு வர வேண்டும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பெ.சண்முகம் வேண்டுகோள் விருத்துள்ளார்.     சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட  துப்புரவு பணியாளர்கள் கடந்த 10 நாட்களாக  மாநகராட்சி ரிப்பன் மாளிகைக்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் இவர்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் நேரடியாக சந்தித்து,  அவர்களது போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “ 10 நாளாக போராடி  வருகின்றனர். இந்த சுமுகமான முறையில் நியாயமான கோரிகை ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்ற எண்ணமே எங்களுக்கு உள்ளது.  அமைச்சர் பேச்சு வார்த்தை குறித்து கூறினார். பேச்சு வார்த்தை சுமுகமான முறையில் முடிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முயற்சி மேற்கொள்ளும்.  தனியார் மையம் என்பது நாடு முழுவதும் நடைபெறும். தமிழகத்திலும் பல்வேறு துறைகளில் தனியார் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் ஏற்கனவே இருக்கும் உரிமையை பறிப்பதை ஏற்க முடியாது. நியாயமான முறையில் இதற்கு தீர்வு காண நாங்கள் முயற்சி மேற்கொள்ளவோம். சாம்சங் விவகாரத்தில் 36 நாட்கள் போராடி உரிமையை பெற்றோம். தொழிலாளர்கள் கோரிக்கை ஏற்க வேண்டும் என்பதையே அரசிடம் நாங்கள் வலியுறுத்துகிறோம். தேர்தல் வாக்குறுதி கொடுத்ததை மட்டுமே அரசு செய்ய வேண்டும் என அவசியம் இல்லை. தற்போது போராடும் கோரிக்கைகளை ஆக்க பூர்வமாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்று தெரிவித்தார்.

இதுதொடர்பாக சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பொதுவாகவே தேர்தல் களத்தில் விமர்சனங்களை முன்வைக்கும்போது அரசியல் நாகரீகத்தோடும், முதிர்ச்சியோடும் அவை அமைய வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான திரு எடப்பாடி பழனிச்சாமி அவர்கள், அண்மையில் தனது தேர்தல் பிரச்சார உரையில், தமிழகத்தின் மிக மூத்த அரசியல் தலைவரும், ஐந்து முறை தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்தவருமான கலைஞர் மு.கருணாநிதி அவர்கள் உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த காலத்தில் மற்றவர்களால் வீட்டு சிறையில் வைக்கப்பட்டிருந்தார், அவர் தலைவராக இருந்தபோதே மு.க. ஸ்டாலின் உள்ளிட்டவர்கள் கட்சியைக் கைப்பற்றிவிட்டார்கள் என்று அவதூறு செய்திருக்கிறார்.


கருத்துக்களும், கொள்கைகளும் மோத வேண்டிய களத்தில், தமிழக முதலமைச்சர் குறித்து உண்மைக்குப் புறம்பாக அவதூறு செய்யும் நிலைக்கு அதிமுக பொதுச்செயலாளர் வந்தது ஏன் ? தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களையும், இந்திய மக்களையும் வஞ்சிக்கும் கூட்டணி கட்சியான பாஜகவைப் புகழ்ந்து பேச எதுவும் இல்லை. அதிமுகவின் பத்தாண்டு கால ஆட்சி குறித்து சொல்வதற்கும் எதுவும் இல்லை. எனவே தான் தரம் தாழ்ந்து அவதூறு பிரச்சாரத்தில் இறங்கி இருக்கிறார். கட்சி அடையாளங்கள், கருத்து வேறுபாடுகள் ஆகியவற்றையெல்லாம் கடந்து அரசியலில் கடைப்பிடிக்க வேண்டிய கோட்பாடுகளின் எல்லை தாண்டப்பட்டதாகவே இந்த உரையைக் கருத வேண்டி உள்ளது. திரு எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் தேர்தல் பரப்புரை பொருத்தமற்ற வகையிலும், கண்ணியக்குறைவாகவும் தொடர்ச்சியாக அமைந்து வருவது தேர்தல் ஜனநாயகத்திற்கு இழுக்கு ஏற்படுத்துகிறது என்ற முறையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) இதற்குக் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.