“நாங்க ஆதரவளிக்காவிட்டால் பதவியேற்பு விழாவே நடந்திருக்காது”- விஜய்க்கு சண்முகம் பதிலடி
மக்களின் ஆதரவுடன் தவெக ஆட்சி நடப்பதாக பேசிய முதலமைச்சர் விஜய்க்கு சிபிஎம் மாநிலச் செயலாளர் சண்முகம் பதிலடி கொடுத்துள்ளார்.
இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சண்முகம், “குடியரசுத் தலைவர் ஆட்சி வந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் தவெக ஆட்சி அமைக்க ஆதரவு அளித்தோம். நாங்கள் ஆதரவு தராமல் இருந்திருந்தால் 10ஆம் தேதி பதவியேற்பு விழாவே நடந்திருக்காது. நாங்கள் குறிப்பிட்ட நோக்கத்திற்காகவே ஆதரவளித்தோம். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்சிதான் ஆட்சி அமைக்க வேண்டுமென நினைத்தோம். ஒரு வேளை நாங்கள் மே 8,9ஆம் தேதிகளில் இருந்த சூழலில் ஆதரவு கொடுக்காமல் போயிருந்தால் மே 10ஆம் தேதி பதவியேற்பு விழாவே நடந்திருக்காது. அதன்பின் எப்போது வேண்டுமானாலும் குடியரசு தலைவர் ஆட்சி அமைந்திருக்கும், தமிழ்நாட்டில் பாஜக காலூன்றக்கூடாது என்பதற்காகவே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒற்றக் கருத்துடைய கட்சிகளுக்கு ஆதரவளித்து வருகிறது. பின்வாசல் வழியாக குடியரசுத் தலைவர் ஆட்சி வருவதை ஏற்க முடியாது. அதனை தடுக்கவே தவெகவுக்கு வெளியில் இருந்து ஆதரவளித்தோம்” என்றார்.

