“தவெக அமைச்சரவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இடம்பெறாது”- சண்முகம்

 
ச்

சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஜோசப் விஜயை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பி சண்முகம் சந்தித்து பேசினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சிபிஎம் மாநில செயலாளர் பெ.சண்முகம், “இனாம் நிலம் என்றாலே கோவில் நிலம் என தவறான புரிதல் உள்ளது. இனாம் நிலங்களை பத்திரப்பதிவு செய்ய அனுமதித்த விஜய்க்கு பாராட்டுகள். கரூர் மாவட்டத்தில் இனாம் நிலங்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டதற்கு வரவேற்பை தெரிவித்துக்கொள்கிறேன். தமிழகம் முழுவதும் இனாம் நிலங்களில் ஏற்பட்டுள்ள தடைகளை நிரந்தரமாக நீக்க வேண்டும். இனாம் நிலங்கள் தொடர்பாக ஆராய தனி ஆணையம் அமைக்க வேண்டும். மேகமலை மக்களை அப்புறப்படுத்த வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் உத்தரவு தொடர்பாக முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம்.சேலம் மாநகராட்சியில்  குடிநீர் விநியோக பணியை சூயஸ் நிறுவனத்திற்கு வழங்கிய ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும், விருதுநகரில் பறைச்சேரி என்ற கிராமத்தின் பெயரை மாற்ற வேண்டும் என முதல்வரிடம் வலியுறுத்தியுள்ளோம். குடிதண்ணீர் உரிமையை தனியாரிடம் கொடுப்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஏற்கவில்லை.. இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்ய முதலமைச்சரை சந்தித்து வலிறுத்தியுள்ளோம்.


பாஜக செய்வதையும், அதிமுகவில் இருந்து ராஜினாமா செய்து தவெகவில் இணைவதையும் சம்மந்தப்படுத்தக் கூடாது. எம்.பி., எம்.எல்.ஏ.க்களை வளைத்து கட்சிகளை உடைத்து பாஜக தனது பலத்தை அதிகரித்துக் கொள்கிறது. ஆனால், இங்கே ராஜினாமா செய்துவிட்டுத்தான் வேறு கட்சியில் இணைந்துள்ளனர். இரண்டையும் சம்மந்தப்படுத்த முடியாது. குதிரை பேர விவகாரத்தில் மக்களுக்கு கோபம் வர வேண்டும். தவெக அமைச்சரவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இடம்பெறாது. அமைச்சரவையில் இடம்பெறுவோம் என வீரபாண்டியன் எதன் அடிப்படையில் கூறினார் என கேட்பேன். அமைச்சரவையில் சிபிஎம் கட்டாயம் பங்கேற்காது என்பதில் உறுதியாக இருக்கிறோம். அமைச்சரவையில் இடம்பெறமாட்டோம் என்பது இரு கம்யூனிஸ்ட் கட்சிகள் சேர்ந்து எடுத்த முடிவு.” என்றார்.