ஐஐடி இயக்குநர் பொறுப்பில் இருந்து காமகோடியை நீக்குக - சண்முகம் வலியுறுத்தல்

கோமியம் தொடர்பாக சர்ச்சைக்குரிய வகையில் பேசிய ஐஐடி இயக்குநர் காமகோடியை பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை மேற்கு மாம்பலத்திலுள்ள கோசாலையில் கடந்த 15ஆம் தேதி (15.01.2025) அன்று மாட்டுப்பொங்கல் விழா நடைபெற்றது. இதில் சென்னை ஐ.ஐ.டி. இயக்குநர் காமகோடி கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சியில் கோமியம் குறித்து அவர் பேசிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, “கோமியம் சிறந்த மருத்துவ குணத்தைக் கொண்டது. காய்ச்சலைக் குணமாக்கும். பாக்டீரியா பாதிப்பு, பூஞ்சை பாதிப்புகளுக்கு எதிராகக் கோமியம் செயல்படக் கூடியது. மேலும் இது, செரிமான கோளாறு உள்ளிட்ட உடல் பாதிப்புகளை எதிர்க்கும் ஆற்றல் கொண்டது” எனப் பேசியிருந்தார். இந்த பேச்சுக்கு ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து பல்வேறு தரப்பினரும் தங்களது கருத்துகளையும் தெரிவித்து வருகின்றனர். கோமியம் குறித்து பேசியது தொடர்பாக அவர் மீண்டும் விளக்கமளித்தார். இது தொடர்பாக அவர் பேசுகையில், “கோமியத்தில் நோய் எதிர்ப்பு சக்தி இருப்பதற்கான 5 ஆராய்ச்சி கட்டுரைகள் மற்றும் ஒரு காப்புரிமை தொடர்பான அறிக்கை என்னிடம் உள்ளது என கூறினார்.
இந்த நிலையில், கோமியம் தொடர்பாக சர்ச்சைக்குரிய வகையில் பேசிய ஐஐடி இயக்குநர் காமகோடியை பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அவர், ஐஐடி இயக்குநர் காமகோடி கோமியம் குறித்து பெருமை பொங்க பேசுவது மக்களிடையே அறிவியலற்ற பார்வையை வளர்க்கும். அவரை பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும். கோமியம் உடல் நலத்திற்கு தீங்கானது என இந்திய கால்நடை நிறுவன ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர் என கூறியுள்ளார்.