வால்பாறை அரசு கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை- 3 பேராசிரியர்கள் சஸ்பெண்ட்

வால்பாறை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி மாணவர்கள் பாலியல் வன்முறை தொடர்பாக பேராசிரியர் உட்பட 4 பேர் கைதை தொடர்ந்து ஒருவர் டிஸ்மிஸ் செய்யப்பட்டார். மேலும் 3 போ் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில் தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது.
வால்பாறை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி உள்ளது. இதில் சுமார் 1000 பேர் படித்து வருகின்றனர். பேராசிரியர்கள், அலுவலக, ஆய்வக பணியாளர்கள் என் 80-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மாணவர்கள் மற்றும் மாணவிகள் விடுதியிலும், அறை எடுத்து தங்கி படித்து வருகின்றனர்.
இந்நிலையில் தொடர் புகாரின் அடிப்படையில் மாவட்ட சமூக நலத்துறை அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் மாணவிகளிடம் கூட்டாக விசாரணை செய்தனர். அவர்களின் வாக்குமூலத்தின்படி, சமூக நலத்துறை அலுவலர் கிருஷ்ணவேணி பொள்ளாச்சி மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில், மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த பேராசிரியர் சதீஷ்குமார்(39), கணினி ஆய்வக உதவியாளர் அன்பரசு (30), என்சி.சி ஆசிரியர் முரளிராஜ்( 33), திட்ட அலுவலர் ராஜபாண்டி ஆகியோர் கைது செய்யப்பட்டு பொள்ளாச்சி சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில் நேற்று கல்லூரிக்கு போலீசார் பாதுகாப்பு அளித்தனர். மேலும் கல்லுாரி முதல்வர் உயர் அதிகாரிகள் உத்தரவை அடுத்து கோவை ஆய்வுக் கூட்டத்திற்கு சென்றார். இந்நிலையில் சிறப்பு திட்ட அலுவலர் ராஜபாண்டி பணி நீக்கம் செய்யப்பட்டு உள்ளார். பேராசிரியர் சதீஷ், அன்பரசு,முரளி ராஜ் ஆகியோர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.