தமிழ் திரையுலகில் பாலியல் புகார் : 7 சங்கங்களின் பிரதிநிதிகள் அடங்கிய குழு அமைப்பு - ஆர்.கே.செல்வமணி..

 
திரைப்பட தொழிலாளர்களுக்காக பையனூரில் 6,000 வீடுகள் : இயக்குநர் ஆர்.கே.செல்வமணி தகவல் !

தமிழ் திரைப்படத்துறையில் பெண்கள் பாதுகாப்புக்காக திரைத்துறையின் 7 சங்கங்களில் பிரதிநிதிகள் அடங்கிய குழு அமைக்கப்பட உள்ளதாக ஃபெஃப்சி சங்கத்தின் தலைவர் ஆர்.கே.செல்வமணி கூறியுள்ளார். மேலும்,  எவ்வளவு பெரிய நடிகரது படமானாலும் 70 சதவீத படப்பிடிப்புகள் தமிழ்நாட்டில் தான் நடக்க வேண்டும் என ஃபெஃப்சி முடிவு செய்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் திரைப்படத் துறையின் விதிமுறைகளை மறுசீரமைப்பு செய்து மேம்படுத்த வேண்டும் என திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பில் முடிவு செய்து, கடந்த ஆகஸ்ட் 16முதல் புதிய திரைப்படங்கள் தொடங்குவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 31 தேதிக்குள் அனைத்து விதிமுறைகளையும் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் மற்றும் நடிகர் சங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி சுமூக முடிவு எடுத்த பின் நவம்பர் 1-ஆம் தேதி முதல் புதிய விதிமுறைகளோடு படப்பிடிப்பு தொடங்குவது என்றும்,  இல்லையெனில் அனைத்து பணிகளும் நிறுத்திவைத்து சுமூக முடிவு எட்டப்பட்ட  பின்னர் படப்பிடிப்பு தொடங்குவது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.   

இதுதொடர்பாக தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் சார்பாக ஃபெஃப்சி யூனியன் தலைவர் ஆர்.கே.செல்வமணி செல்வமணி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, நடிகர் மற்றும் தயாரிப்பாளர்கள் சங்கம் மறுசீரமைப்பு செய்யப்பட்டு புதிய விதிமுறைகளை சம்மேளனத்திற்கு அனுப்பியிருந்தது.  உடனடியாக அனைத்து சங்கங்களுடன் விவாதித்து விதிமுறைகள் அனைத்திற்குமான பதிலை கடந்த வாரமே தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு அனுப்பி இருக்கிறோம்.  

 பாலியல் தொல்லை
ஏற்கனவே புதிய திரைப்படங்கள் தொடங்குவது நிறுத்தப்பட்டமையால் தொழிலாளர்கள் வேலை வாய்ப்பின்றி மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.  எனவே பேச்சு வார்த்தையை செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் முடிவெடுத்து, அக்டோபர் 1 முதல் புதிய விதிமுறைகளோடு அனைத்து படப்பிடிப்புகளும் தொடங்க வேண்டும் என தயாரிப்பாளர்கள் சங்கத்தினை கேட்டுக் கொள்கிறோம். 

திரைப்படத்துறையில் பெண்களுக்கு பாதுகாப்பு குறித்து சம்மேளனத்தின் சார்பில் இயக்குனர்கள் சங்கம், ஒளிப்பதிவாளர்கள் சங்கம், டப்பிங் யூனியன், மகளிர் யூனியன் உள்ளிட்ட 7 சங்கங்களில் இருந்து இரண்டு பிரதிநிதிகள், வழக்கறிஞர்கள், சமூக சேவகர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் அமைப்பில் இருந்து மூவர் அடங்கிய குழு அமைக்கப்பட உள்ளது.  இக்குழுவில் பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் அளிக்கலாம்.  புகார் மீது உடனடியாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும். 

தனுஷ் நடித்து வரும் பட விவகாரத்தில், அப்படத்தின் படப்பிடிப்பு ஜூலை மாதமே தொடங்கப்பட்டுள்ளது; ஆனால் தயாரிப்பு நிறுவனம் முறைப்படி தயாரிப்பாளர்கள் சங்கத்தில் தெரிவித்து பதிவு செய்யவில்லை. வொண்டர் பார் நிறுவனத்தின் அறியாமை அல்லது மெத்தனப்போக்கு காரணமாக சம்மேளனம் படப்பிடிப்புக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை. ஜூலையிலேயே படப்பிடிப்பு நடந்ததற்கான ஆதாரங்கள் அனுப்பி வைக்கப்பட்டது.  தயாரிப்பாளரின் வேண்டுகோள் மற்றும் ஃபெஃப்சியின் பரிந்துரை கடிதம் ஆகியவற்றை ஏற்று தயாரிப்பாளர்கள் சங்கம் படப்பிடிப்புக்கு அனுமதி வழங்கியுள்ளது. 

50% தொழிலாளர்களுடன் சின்னத்திரை படப்பிடிப்பை தொடங்க அனுமதிக்க வேண்டும் – ஃபெப்சி அமைப்பு கோரிக்கை…

பாலியல் புகாரில் எச்சரிக்கை என்பது சரிவராது. குற்றத்தின் தன்மையை பொறுத்து மாறுபடும்; குற்றத்தின் தன்மை தீவிரமானதாக இருந்தால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். தமிழ் திரையுலகில் இதுபோன்ற புகார்கள் மிகவும் குறைவு.  பெண் தொழிலாளர்கள் மீது அத்துமீறல் செய்பவர் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் பாதிக்கப்படும் பெண்களுக்கு சம்மேளனம் துணை நிற்கும்.  பாலியல் புகார்கள் குறித்த விசாரணை ரகசியமாக நடத்தப்படும், ஆகையால் தைரியமாக புகார் அளிக்கலாம். 

தமிழ் திரையுலகில் உள்ள உப்புமா கம்பெனிகளை நம்பி யாரும் ஏமாற வேண்டாம்.  திரைப்படத்துறை பெயரை சொல்லி ஏமாற்றும் கும்பல் உலவுகிறது. நவம்பர் 1-ஆம் தேதி முதல் தமிழ் சினிமாவின் காட்சி அமைப்புகளுக்கு வேறு மாநிலங்களிலோ அல்லது நாட்டிலோ போய் எடுத்தால் அது எவ்வளவு பெரிய நடிகரின் படமாக இருந்தாலும் அதற்கு ஃபெஃப்சி ஒத்துழைப்பு தராது.  70 சதவீதம் படப்பிடிப்பு தமிழகத்தில் நடத்த வேண்டும் என்பதே ஃபெஃப்சியின் நோக்கம் “ என்று தெரிவித்தார்.