பாலியல் வன்கொடுமை - கைதானவர் குறித்து காவல்துறை பகீர் தகவல்

 
ச்

அண்ணா பல்கலை. பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் கைதான ஞானசேகரன் குறித்து போலீசார் பகீர் தகவல் வெளியிட்டுள்ளனர்.

anna

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மெக்கானிக் இன்ஜினியரிங் பிரிவில் நான்காம் ஆண்டு படிக்கும் மாணவரும். இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவியும் காதலித்து வந்துள்ளனர். இருவரும் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள விடுதிகளில் தங்கி உள்ளனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு உணவு அருந்திய பின், இருவரும் நடை பயிற்சி சென்றுள்ளனர். அங்கு ஒரு மறைவான இடத்துக்கு சென்று பேசிக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அங்கு வந்த இருவர் மாணவரை அடித்து விரட்டி விட்டு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்டதாக கூறப்படும் மாணவி, நீண்ட ஆலோசனைக்கு பின் நேற்று இரவு கோட்டூர்புரம் காவல் உதவி ஆணையரிடம் இது தொடர்பாக புகார் அளித்துள்ளார். இச்சம்பவத்தில் தொடர்புடைய ஞானசேகரன் (37) என்ற நடைபாதை பிரியாணி கடைக்காரர்  கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

இதனிடையே காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை கோட்டூர்புரத்தில் சாலையோரம் பிரியாணி செய்து வந்த ஞானசேகரன், இரவில் பிரியாணி விற்பனையை முடிந்துவிட்டு, அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள காட்டுப்பகுதிக்கு சென்று அங்கு பேசிக்கொண்டிருக்கும் காதலர்களை வீடியோ பதிவு செய்து, போலீஸ் எனக்கூறி மிரட்டி மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். கைது செய்யப்பட்ட ஞானசேகரன் பெயரில் 15-க்கும் மேற்பட்ட திருட்டு, வழிப்பறி வழக்குகள் நிலுவையில் உள்ளது, மேலும் ஞானசேகரன் இது போன்று பல பெண்களிடம் அத்துமீறலில் ஈடுபட்டதுடன், சில ஆண்டுகளுக்கு முன் மற்றொரு மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதானவர், தனியாக இருந்த காதலர்களை வீடியோ எடுத்து மிரட்டி பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். ஞானசேகரனின் செல்போனில் இருந்து பல வீடியோக்களை காவல்துறை கைப்பற்றி உள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளது.