“பாலியல் வழக்கில் ஒருவர் மட்டுமே குற்றவாளி என எப்படி சொல்வீர்கள்?”- காவல் ஆணையருக்கு நீதிபதிகள் கேள்வி
மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் புலன் விசாரணை நடந்து வரும் போதே, ஞானசேகரன் மட்டுமே சம்பந்தப்பட்டுள்ளார் என்று எப்படி கூற முடியும்? என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
அண்ணா பல்கலைக்கழக இரண்டாம் ஆண்டு மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பான காவல்துறையினரின் விசாரணையில் குறைபாடுகள் உள்ளதாகவும், சட்டப்படி பாதிக்கப்பட்ட பெண்ணின் அடையாளத்தை வெளிப்படுத்தக் கூடாது என்ற போதிலும் வழக்கின் முதல் தகவல் அறிக்கை காவல்துறையினரால் வெளியிடப்பட்டுள்ளது என்பதால் இந்த சம்பவம் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என பெண் வழக்கறிஞர் வரலட்சுமி சென்னை உயர்நீதிமன்றத்திற்கு இன்று கடிதம் அனுப்பி இருந்தார். அந்த கடிதத்தில் வழக்கில் சம்பந்தப்பட்ட ஒருவரை கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்து இருக்கிறது, ஆனால் பாதிக்கப்பட்ட பெண்ணின் வாக்குமூலத்தில் மற்றொரு நபரையும் குறிப்பிட்டு இருக்கிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் வி.லக்ஷ்மி நாராயணன் அடங்கிய அமர்வில் வழக்கறிஞர் வரலட்சுமி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜெயபிரகாஷ் கடிதத்தின் அடிப்படையில் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டு விசாரணையை சிபிஐக்கு மாற்ற உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இதே போல மற்றொரு வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி முதல் தகவல் அறிக்கையை காவல்துறையினர் வெளியிட்டதன் காரணமாக பாதிக்கப்பட்ட பெண்ணின் ஒட்டுமொத்த குடும்பமும் பாதிக்கப்பட்டிருக்கிறது. அண்ணா பல்கலைக்கழகம் மட்டுமல்லாமல் அனைத்து கல்வி நிறுவனங்களின் விடுதிகளில் தங்கி படிக்கும் மாணவிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி இருக்கிறது என்பதால் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று முறையிட்டார். இரு வழக்கறிஞர்களின் முறையீட்டையும் பெண் வழக்கறிகளின் கடிதத்தையும் ஆய்வு செய்த நீதிபதிகள் காவல்துறையினரின் புலன் விசாரணை குறித்து தீவிரமான குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்பட்டுள்ளதால் பெண் வழக்கறிஞர் வரலட்சுமி கடிதத்தை அடிப்படையில் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக தெரிவித்தனர்.
வழக்கு விசாரணைக்கு வந்தபோது மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் புலன் விசாரணை நடந்து வரும் போதே, ஞானசேகரன் மட்டுமே சம்பந்தப்பட்டுள்ளார் என்று எப்படி கூற முடியும்? புலன் விசாரணை அதிகாரி, காவல் ஆணையருக்கு கீழ் பணிபுரிபவர், அவர் எப்படி மற்றொருவரை கண்டுபிடிப்பார்? என உயர்நீதிமன்ற நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்கு புகாரில் ஞானசேகரன் பெயர் மட்டும் குறிப்பிடப்பட்டுள்ளது என்று தான் காவல் ஆணையர் கூறினார் என அரசு தலைமை வழக்கறிஞர் பதிலளித்தார். மேலும் கைதான ஞானசேகரன் ஆளுங்கட்சி நிர்வாகி அல்ல என்றும் உடனடி கைது நடவடிக்கை எடுத்த போலீசாரை பாராட்டாமல் 3வது நாள் சிபிஐ விசாரணை கோரி வழக்கு தாக்கல் செய்துள்ளனர் எனவும் தலைமை வழக்கறிஞர் கூறினார். அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் FIR வெளியானதற்கும், பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்திற்கும் காவல்துறையும், அரசும் தான் பொறுப்பு எனக் கூறிய நீதிபதி, கைது செய்யப்பட்டவர் காலில் பேண்டேஜ் ஏன் போடப்பட்டுள்ளது? குற்றத்தை தடுக்க வேண்டியது அரசின் கடமை, ஒருவரை கைது செய்ததற்காக பாராட்ட வேண்டும் என எப்படி சொல்ல முடியும்? என அடுக்கடுக்காக கேள்வி எழுப்பினார். பத்திரிகையாளர்களை சந்திக்கும் முன் காவல் ஆணையர் அரசு அனுமதியை பெற்றாரா? என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
10 ஆண்டுகளாக ஞானசேகரன் அந்த வளாகத்தில் சுற்றி இருக்கிறான் ஆனால் அவன் மீது அப்போதே நடவடிக்கை எடுக்கவில்லை எத்தனை மாணவிகள் அவனால் பாதிக்கப்பட்டார்களோ? FIR ல் பெண்ணை களங்கப்படுத்தி அவருடைய ஆண் நண்பருடன் இருந்ததாக குறிப்பிடுவதெல்லாம் சட்ட விரோதமானது. கன்னியக்குறைவானது, அண்ணா பல்கலைக்கழகத்தின் பதிவாளர், துணை வேந்தர்கள் என்ன
செய்கிறார்கள், நிர்பாயா நிதி என்ன ஆனது? என்றும் சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.