"மக்கள் படும் அவலங்களை மூடி மறைப்பதற்காக மதபிரச்னைகளை உருவாக்கும் திமுகவினர்" - சசிகலா குற்றச்சாட்டு!

 
sasikala

பெருந்துறை சிப்காட்டில் செயல்படும் சாய, சலவை தொழிற்சாலைகளில் இருந்து சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் வெளியேற்றுவதை தடுக்க வேண்டும் என திமுக  அரசுக்கு சசிகலா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் உள்ள சிப்காட் தொழிற்பேட்டையில் சுமார் 200-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. சாய, தோல் ஆலைகள் மட்டுமின்றி அபாயகரமான ரசாயனங்களை பயன்படுத்தும் தொழிற்சாலைகளும் இயங்கி வருகின்றன. இங்கு இயங்கிவரும் சில நிறுவனங்கள் சட்ட விரோதமாக  ஆலை கழிவுகளை வெளியேற்றி வருவதாக தெரியவருகிறது. தொழிற்சாலைகள் கழிவுகளை வெளியேற்றக் கூடாது. மறுசுழற்சி முறையில் கழிவு நீரை சுத்திகரித்து பயன்படுத்த வேண்டும் என்ற உத்தரவு உள்ளது. மேலும் சாய, தோல் ஆலை கழிவுகளை சுத்திகரிக்க பொது சுத்திகரிப்பு நிலையங்கள் உள்ளன. ஆனால், இவற்றையும் மீறி ரசாயன ஆலை கழிவு நீர் ஓடைகளில் வெளியேற்றப்படுவதாக சொல்லப்படுகிறது. இதன் காரணமாக சிப்காட் வளாகத்தில் இருந்து ஓடையின் வழியே செல்லும் கழிவு நீர் 14 ஏக்கர் பரப்பிலான ஓடைக்காட்டூர் என்ற பகுதியில் உள்ள குளத்தில் நிரம்பி வருவதாகவும், அதில் இருந்து வெளியேறும் கழிவு நீர் அடுத்தடுத்து 8 குளங்களுக்கு செல்வதால், சுமார் 10 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு நீர் ஆதாரம் முற்றிலுமாக பாதிக்கப்பட்டு இருப்பதாக இப்பகுதி மக்கள் சொல்லி வேதனைப்படுகின்றனர். 

sasikala

அதேபோன்று, ஈங்கூர், வாய்ப்பாடி, வரப்பாளையம், கூத்தம்பாளையம், பாழத்தொழுவு உள்ளிட்ட பகுதிகளில் நிலத்தடி நீர் கடுமையாக மாசடைந்து விட்டதாகவும் சொல்லப்படுகிறது. அபாயகரமான ரசாயன கழிவுகளால் தோல் நோய்களும், சுவாச கோளாறுகளும், ஏற்படுவதுடன் புற்று நோய் பாதிப்புகளும் இப்பகுதியில் அதிகரித்து இருப்பதாக தெரிய வருகிறது. சோளம், கம்பு, ராகி, காய்கறிகள் விளைந்த பூமியில் இன்றைக்கு கால்நடைகளை கூட மேய்க்க முடியாத நிலைக்கு விவசாயிகளின் வாழ்வாதாரம் முற்றிலும் அழிந்துவிட்டதாக சொல்லப்படுகிறது. இதன் காரணமாக இப்பகுதியில் மக்கள் வாழ முடியாமல் பலர் கிராமங்களை விட்டு வெளியேறும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என்பது மிகவும் கவலை அளிக்கிறது.

நிலத்தடி நீர் பாதிப்பு குறித்து சமீபத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் வரப்பாளையம் ஊராட்சி மற்றும் வாய்ப்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட  பகுதிகளில் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் தண்ணீர் மாதிரிகள் எடுக்கப்பட்டதாகவும், இதை ஆய்வு செய்ததில் நீரில் கரைந்து உள்ள இரசாயன பொருட்கள் அளவுக்கு அதிகமாக இருப்பதாகவும், குடிப்பதற்கு ஏற்றது அல்ல என்றும் ஆய்வறிக்கைகளின் முடிவுகள் இருப்பதாக தெரியவருகிறது. 

sasikala
ஈரோடு சிப்காட் தொழிற்சாலைகளிலிருந்து வெளியேற்றப்படும் கழிவு நீரை தடுக்க வேண்டிய திமுக தலைமையிலான அரசு எதைப்பற்றியும் கவலைப்படாமல் கண்டும் காணாமல் இருந்து வருவது கடும் கண்டனத்திற்குரியது. வாக்களித்த மக்கள் வாழ வழியின்றி தவித்து வரும் சூழலில் பாதிக்கப்பட்டுள்ள மக்களை காப்பாற்றவேண்டிய திமுகவினர் இன்றைக்கு தேவையற்ற மதபிரச்னைகளை எழுப்புவதில் மும்முரம் காட்டிவருகின்றனர். திமுக தலைமையிலான ஆட்சியில் இதுபோன்று மக்கள் படும் அவலங்களை மூடி மறைப்பதற்காக வேண்டுமென்றே மதபிரச்னைகளை உருவாக்கும் வகையில் கண்டதையும் பேசி காலத்தை கழித்து வருகின்றனர். இது திமுகவினர் தமிழக மக்களுக்கு செய்கின்ற மிகப்பெரிய துரோகமாகும். 

எனவே, திமுக தலைமையிலான அரசு ஈரோடு, பெருந்துறை சிப்காட் தொழிற்சாலைகளிலிருந்து வெளியேற்றப்படும் கழிவு நீரை உடனே தடுத்த நிறுத்த வேண்டும். இவ்வாறு வெளியேற்றப்படும் கழிவு நீரால், நிலம், நீர், காற்று ஆகியவை மாசடைவதால், இப்பகுதியில் உள்ள மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து வாழ தகுதியற்ற பகுதியாக மாறி போன இந்த கிராமங்களை, மாசற்ற பகுதியாக மாற்ற தேவையான சாத்திய கூறுகளை கண்டறிந்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக தலைமையிலான விளம்பர அரசைக் கேட்டுக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.