திமுகவின் மாநில சுயாட்சி நாடகத்தின் பின்னால் இருப்பது பிரிவினைவாதம்- வானதி சீனிவாசன்

 
வானதி சீனிவாசன்

கடந்த காலங்களில் திமுகவின் பிரிவினையை விதைக்கும் முயற்சிகள் படுதோல்வி அடைந்த நிலையில் இப்போது மாநில சுயாட்சி என்ற பெயரில் புதிய முயற்சியை முதலமைச்சர் ஸ்டாலின் துவங்கியிருப்பதாக பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

வானதி

இதுதொடர்பாக பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திமுகவின் மாநில சுயாட்சி நாடகத்தின் பின்னால் இருப்பது பிரிவினைவாதம். தமிழ்நாடு சட்டமன்றத்தில் 110வது விதியின்கீழ் இன்று (15.4.2025) அறிக்கை அளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "மாநில உரிமைகளைப் பாதுகாக்க உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில், திட்டக்குழு முன்னாள் தலைவர் நாகநாதன், ஓய்வுபெற்ற முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி அசோக் வர்தன் ஷெட்டி ஆகியோரைக் கொண்ட உயர்நிலை குழு அமைக்கப்படுகிறது" என அறிவித்தார். திமுக அரசு என்ற அரசியல் கட்சியே, இந்தியாவை பிளக்கும் நோக்கத்துடன் பிறந்த கட்சி. 'பிரித்தாளும் சூழ்ச்சி' கொள்கையை கையாண்ட ஆங்கிலேயர்களின் சூழ்ச்சி தான் நீதிக்கட்சி. அந்த நீதிக்கட்சியே பின்னாளில் திராவிடர் கழகமாக, திராவிட முன்னேற்றக் கழகம் என்ற அரசியல் கட்சியாகியுள்ளது.

'அடைந்தால் திராவிட நாடு. இல்லையெனில் சுடுகாடு' என்றவர்கள், அரசியலமைப்பு சட்டம் உருவான பிறகு, தாங்கள் நிரந்தரமாக சிறையில் இருக்க நேரிடும் என்பதால் தனி நாடு கோரிக்கையை கைவிட்ட கட்சிதான் திமுக. தமிழர்களின் மனதில் குறிப்பாக மாணவர்கள், இளைஞர்களின் மனதில் பிரிவனை எண்ணத்தை விதைத்து, அதன் வழியாக இந்திய தேசியத்திற்கு எதிரான சிந்தனையை வளர்ப்பதே திமுகவின் மறைமுகத் திட்டம். அதற்காகவே தமிழ் மொழி, மும்மொழிக்கு எதிர்ப்பு, மாநில சுயாட்சி என்று பல்வேறு பெயர்களில் திமுக தனது மறைமுக செயல்திட்டத்தை செயல்படுத்தப் பார்க்கிறது. கடந்த காலங்களில் திமுகவின் பிரிவினையை விதைக்கும் முயற்சிகள் படுதோல்வி அடைந்த நிலையில் இப்போது மாநில சுயாட்சி என்ற பெயரில் புதிய முயற்சியை முதலமைச்சர் ஸ்டாலின் துவங்கியிருக்கிறார்.

வானதி சீனிவாசன்

இந்தியா என்ற நாட்டின் ஒரு பகுதி தான் தமிழ்நாடு. இதை மறந்து அல்லது மறந்தது போல நடித்து, தமிழ்நாட்டை, ஒரு தனி நாடு போல கருதினால் அதன் விளைவுகள் மிக மோசமாக இருக்கும்.  கடந்த நான்காண்டுகால திமுக அரசின் ஊழல்களால், முறைகேடுகளால், நிர்வாகத் திறமையின்மையால் மக்கள் பெரும் கொந்தளிப்பில் உள்ளனர். அதை மறைக்கவே, இந்த மாநில சுயாட்சி நாடகம். இதற்குப் பின்னால் பிரிவினை எண்ணம் இருப்பதை அறியாதவர்கள் அல்ல தமிழ்நாட்டு மக்கள். எனவே, மக்களை திசைதிருப்பும் ஆபத்தான அரசியல் விளையாட்டுகளை கைவிட்டு ஆக்கப்பூர்வமான செயல்களில் திமுக அரசு கவனம் செலுத்த வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.