காலி மது பாட்டில்கள் மூலம் இவ்வளவு வருமானமா?

 
tasmac

டாஸ்மாக் மதுபான கடைகளில், காலி பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம், செப்டம்பர் மாதம் முதல் தமிழகம் முழுவதும் அமல்படுத்தப்பட உள்ளது என டாஸ்மாக் நிர்வாகம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

tasmac

மலைவாசஸ்தலங்களில் மதுபாட்டில்களை வீசிச் செல்வதால் விலங்கினங்கள் பாதிக்கப்படுவது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி அமர்வு, டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் மதுபான பாட்டிலுக்கு 10 ரூபாய் அதிகமாக விற்கவும், திருப்பித் தரப்படும் காலி பாட்டிலுக்கு 10 ரூபாயை திருப்பிக் கொடுக்கவும் வகை செய்யும், காலி பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் மலைப்பகுதிகளில் அமல்படுத்த உத்தரவிட்டது. பின், இந்த திட்டம் பல்வேறு மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டது. இது சம்பந்தமான வழக்கு, இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, திரும்பப் பெற்ற பாட்டில்களை விற்பனை செய்ததன் மூலம் அரசுக்கு 250 கோடி ரூபாய் வருவாய் கிடைக்க உள்ளதாக மனுதாரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

தமிழகத்தில் ஒரு நாளைக்கு எத்தனை மதுபாட்டில்கள் விற்கப்படுகின்றன என நீதிபதிகள் கேள்வி எழுப்பியதற்கு, சராசரியாக ஒரு நாளைக்கு 70 லட்சம் பாட்டில்கள் விற்கப்படுவதாக டாஸ்மாக் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.  மேலும், காலி பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம், செப்டம்பர் முதல் தமிழகம் முழுவதும் அமல்படுத்தப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 7 ம்தேதிக்கு தள்ளிவைத்தனர்.