செந்தில் பாலாஜி மீது குற்றச்சாட்டு பதிவு இல்லை; அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு

 
“பழனிசாமி என்ன மண் வெட்டியா முதல்வரானாரு?” – கரூரை சிதறவிட்ட செந்தில்பாலாஜி

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் விசாரணையை தள்ளிவைக்க வேண்டும் என்று செந்தில் பாலாஜி தரப்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டதால், இந்த வழக்கில் இன்று குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படவில்லை.

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் 2023 ஜூன் 14ஆம் தேதி கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமலாக்கத் துறையினர் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்திருந்தனர். 3000 பக்கங்களுடன் கூடிய இந்த குற்றப்பத்திரிகை நகலை, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வழங்கியது.

இந்நிலையில் வழக்கின் அடுத்தகட்டமாக குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்வதற்காக அமைச்சர் செந்தில் பாலாஜியை இன்று (ஜனவரி 22) ஆஜர்படுத்தும்படி சிறைத்துறைக்கு முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவு பிறப்பித்திருக்கிறார். இந்த வழக்கு நீதிபதி எஸ்.அல்லி முன்பு இன்று விசாரணைக்கு வந்தபோது, செந்தில் பாலாஜி தரப்பில் புதிய மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், போக்குவரத்துக் கழகங்களில் வேலை வாங்கி தருவதாகக் கூறி மோசடி செய்ததாக சென்னை மத்திய குற்றப்பிரிவில் பதிவு செய்யப்பட்ட 3 வழக்குகளின் விசாரணை முடியும் வரை, அமலாக்கத் துறை தாக்கல் செய்த இந்த வழக்கின் விசாரணையை துவங்க கூடாது என்றும், விசாரணையை தள்ளிவைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

Image

இந்த மனு மீது முடிவெடுக்கும் வரை குற்றச்சாட்டுக்கள் பதிவையும் தள்ளிவைக்க வேண்டும் என்று செந்தில் பாலாஜி தரப்பில் கோரப்பட்டது. நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தாக்கல் செய்த ஆவணங்களை தங்களுக்கும் வழங்கக் கோரி இரண்டாவது முறையாக தாக்கல் செய்த மனுவையும் விசாரிக்க வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி அல்லி, அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட இரு மனுக்களுக்கும் பதில் அளிக்கும்படி அமலாக்கத் துறைக்கு உத்தரவிட்டு,  விசாரணையை ஜனவரி 29ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார். அதேபோல நீதிமன்ற காவல் நீட்டிப்புக்காக மட்டும் அமைச்சர் செந்தில் பாலாஜியை காணொளி காட்சி மூலம் இன்று ஆஜர்படுத்தும்படி நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.