முன் ஜாமீன் பெற்றார் செந்தில் பாலாஜி சகோதரர்..!

 
1

சட்டப்பேரவையில் சபாநாயகருக்கு எதிரான தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களிக்க 35 கோடி ரூபாய் சன்மானம் தருவதாக தன்னிடம் சிலர் பேரம் பேசியதாக கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை தொகுதி தவெக எம்.எல்.ஏ. இளையராஜா, சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் திருவல்லிக்கேணி காவல்துறை பதிவு செய்யப்பட்ட வழக்கில் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில், திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் ஆகியோர் விசாரணைக்கு ஆஜராக காவல்துறை சம்மன் அனுப்பியதையடுத்து, இருவரும் முன் ஜாமின் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.கே.இளந்திரையன், இருவருக்கும் நிபந்தனை முன் ஜாமின் வழங்கி ஜூலை 8ஆம் தேதி உத்தரவிட்டார். 15 நாட்களில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் சரணடைந்து முன் ஜாமின் பெறவும், அதன்பின்னர் மறு உத்தரவு வரும்வரை விசாரணை அதிகாரி முன் தினமும் இருவேளையும் ஆஜராகி கையெழுத்திட வேண்டுமென நிபந்தனை விதித்திருந்தார்.

மேலும், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் 25 ஆயிரம் ரூபாய்க்கான சொந்த ஜாமினும், அதே தொகைக்கான இரு நபர் ஜாமினும் செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டிருந்தது.

அதன்படி ஜூலை 24ஆம் தேதி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி நீதிமன்றத்தில் ஆஜராகி முன் ஜாமின் பெற்றார். பின்னர் காவல்துறையினர் முன் தொடர்ந்து ஆஜராகி வருகிறார்.

இந்த நிலையில் அவரது சகோதரர் அசோக் குமார் இன்று மாலை (ஜூலை 27) சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.கார்த்திகேயன் முன் ஆஜரானார். பிணைத்தொகை மற்றும் உத்தரவாதத்தை செலுத்திய பின்னர், அவருக்கும் முன் ஜாமின் வழங்கப்பட்டது. இதையடுத்து காவல்துறை முன் தினமும் இருவேளையும் ஆஜராகி அவர் கையெழுத்திடவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.