போன தேர்தலில் கொலுசு கொடுத்து வெற்றி பெற்றார் செந்தில் பாலாஜி - இபிஎஸ் அட்டாக்..!!

 
Q

கரூர் மாவட்டத்தில் போட்டியிடும் அ.தி.மு.க., வேட்பாளர்களை ஆதரித்து பேசிய அ.தி.மு.க., பொதுச்செயலர் இபிஎஸ்,

நம் எதிரியான முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி நம்மை பலவீனமாக நினைத்தார். ஆனால், அவர் தான் பலவீனப்பட்டு, இந்த மாவட்டத்தை விட்டே ஓடி விட்டார். எதிரிகளை வீழ்த்தியாக வேண்டும். அதனாலேயே மாவட்டம் முழுதும் அ.தி.மு.க.,வே வேட்பாளர்களை நிறுத்தி உள்ளது. நாமே எதிரிகளை ஓட ஓட விரட்டுவோம்.

செந்தில்பாலாஜிக்கு, எந்த துறையைக் கொடுத்தாலும், அதில் ஊழல் செய்வார். எங்கு போனாலும், எதை ஆட்டையைப் போடலாம் என்றே சிந்திப்பார்.எல்லாவற்றிலும் முறைகேடு செய்பவர் தான் இந்த செந்தில் பாலாஜி. அவர் மீது நிறைய முறைகேடு வழக்குகள் உள்ளன. செந்தில் பாலாஜி தம்பி, ஆட்டம் போடக்கூடாது; ஆட்டம் போட்டால் இருந்த இடம் தெரியாமல் போவீர். செந்தில் பாலாஜியை வைத்து ஸ்டாலின், ஆட்டம் காட்டுகிறார்.ஏற்கனவே உன் நெஞ்சை பிளந்து விட்டனர். 453 நாட்கள் சிறையில் இருந்ததை மறந்து விடக்கூடாது. யாரும் காப்பாற்ற மாட்டார்கள். செந்தில் பாலாஜியை கொள்ளை அடிக்க பயன்படுத்துகின்றனர். வாழ்க்கையை தொலைத்து விடக்கூடாது. இனிமேலும், ஸ்டாலினுக்கு செந்தில் பாலாஜி துணை நின்றால், மீண்டும் ஜெயிலுக்குத்தான் போக வேண்டும்.

போன தேர்தலில் கொலுசு கொடுத்து வெற்றி பெற்ற செந்தில் பாலாஜி, இந்த முறையும் நிறைய கொடுக்க திட்டமிட்டுள்ளார்.

ஆனால், அதில் அவருக்கு வெற்றி கிடைக்காது. கரூர் தொகுதியை பொறுத்தவரை பண நாயகத்துக்கும், ஜனநாயகத்துக்கும் நடக்கும் தேர்தல். இதற்கு நீங்கள் சரியான முடிவு கட்ட வேண்டும். மக்களை பட்டியில் அடைக்கிறார் செந்தில்பாலாஜி. இதன் மீது அரசு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கா விட்டால், சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார். மணல் கொள்ளை நடந்தது குறித்து, பிரதமர் மோடி பேசியுள்ளார். அதிகாரிகள் துணை நிற்பதால், எதையும் செய்ய முடியாது என நினைக்கின்றனர். சாட்டிலைட் மூலம் கண்காணிக்கப்படுகிறது.

எங்கும் மணல் அள்ளுகின்றனர்.எந்த லாரிகள் வாயிலாக அள்ளுகின்றனர் என்பதெல்லாம் பதிவாகிறது. அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், அவற்றின் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மணல் கொள்ளையை தடுக்கத்தான், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் சென்றார். அவர் மீது போலீசார் பொய் வழக்கு போட்டனர். ஏதேதோ கண்டுபிடிப்புக்கு டாக்டர் பட்டம் தருகின்றனர். 'டப்பு' எப்படி வாங்குவது என்பதற்கு, செந்தில் பாலாஜிக்கு டாக்டர் பட்டம் கொடுத்தால் சரியாக இருக்கும்.

செந்தில் பாலாஜி, ஐந்து கட்சிகளுக்கு தாவியவர். தி.மு.க.,வில் உழைத்தவர்கள் ஏராளமாக இருக்கும்போது, இவருக்கு பதவி கொடுப்பது ஏன்? அ.தி.மு.க.,வில் இருந்து சென்ற எட்டு பேர் தி.மு.க.,வில் அமைச்சர்களாக உள்ளனர். 19 பேருக்கு, 'சீட்' வழங்கப்பட்டுள்ளது. அதிலிருந்தே தி.மு.க., தேய்ந்து வருவது தெரிகிறது. அரவக்குறிச்சியில் செந்தில் பாலாஜி போட்டியிட்ட போது, அருந்ததியர் குடும்பத்துக்கு, ௩ சென்ட் நிலம், கான்கிரீட் வீடு கட்டி தருவதாக சொன்னார்; தரவில்லை. தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், மணல் அள்ளலாம் என சொல்லி வாக்குறுதி கொடுத்து பேசினார் செந்தில் பாலாஜி. ஆனால், மணல் அள்ளியது மக்கள் அல்ல. தி.மு.க.,வினர். இதற்கெல்லாம் கூட, அ.தி.மு.க., ஆட்சி அமைந்ததும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.