தமிழ்நாடு முழுக்க சோலார் மாவட்டங்கள்- அமைச்சர் செந்தில் பாலாஜி

 
senthil balaji tn assembly

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் சோலார் மின் உற்பத்தி பூங்கா உருவாக்க உள்ளதாகவும், முதல் சோலார் மின் உற்பத்தி பூங்காவை திருவாரூர் மாவட்டத்தில் முதலமைச்சர் தொடங்கி வைக்க உள்ளார் என்றும் அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.

மின் நிலையம்

சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது, ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் பழுப்பு நிலக்கரி திட்டத்தை செயல்படுத்தும் செயற்குறிப்பு அரசிடம் உள்ளதா? எனவும், ஜெயங்கொண்டம் பகுதியில் நிலக்கரி திட்டம் கைவிடப்பட்டதன் காரணமாக, இன்றைய மின்சார தேவையை கருத்தில் கொண்டு ஜெயங்கொண்டம் பகுதியில் சூரிய சக்தி மின் உற்பத்தி நிலையம் அமைக்க அரசு முன்வருமா? என்றும் சட்டமன்ற உறுப்பினர் கண்ணன் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய அனைத்து மாவட்டங்களும் சோலார் மாவட்டமாக உருவாக்கப்பட வேண்டும் என முதலமைச்சரால் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், முதற்கட்டமாக திருவாரூர் மாவட்டத்தில் முதல் சோலார் மின் உற்பத்திக்கான பூங்கா அமைப்பதற்கான திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கவுள்ளார் என்றும் கூறினார். மேலும், அனைத்து மாவட்டங்களிலும் சோலார் மின் உற்பத்தி திட்டம் துவக்கப்படவுள்ள நிலையில்,முதலமைச்சரின் அனுமதி பெற்று ஜெயங்கொண்டம் தொகுதிக்கு முன்னுரிமை கொடுக்கப்படும் எனவும் தெரிவித்தார். இத்திட்டம் நிறைவடைந்து செயல்படுத்தப்படும் பட்சத்தில் மாற்று மின்சார உற்பத்தி முறைகளில் இந்தியாவிற்கே தமிழ்நாடு முன்னோடியாக திகழும் என்பது குறிப்பிடதக்கது.