“பாட்டிலுக்கு ரூ.10 என்று பாட்டெல்லாம் பாடினாங்க, இன்று பாட்டிலுக்கு ரூ.30 வரை வந்திருக்கிறது”- செந்தில் பாலாஜி
சட்டப்பேரவையில் பார்ட்டி ஃபண்ட் என பொத்தாம் பொதுவாக பேசியதால் திமுகவினர் வெளிநடப்பு செய்தனர். மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சரிடம் செந்தில் பாலாஜி point of clarification கேட்டபோது சபாநாயகர் அனுமதி அளிக்காததால் திமுகவினர் வெளி நடப்பு செய்தனர்.
சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்த பின் செய்தியாளர்களிடம் பேசிய செந்தில்பாலாஜி, “பாட்டிலுக்கு 10 ரூபாய் என்று பாட்டெல்லாம் பாடினார்கள். ஆனால், தவெக ஆட்சிக்கு வந்த பிறகு, பாட்டிலுக்கு 20, 30 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. அதற்கும் அமைச்சர் ஒரு புதிய விளக்கத்தை தருகிறார். பேரவையில் ஒரு துறையின் அமைச்சர் பேசும்போது, உரிய ஆதாரத்துடன் பேச வேண்டும். ஆனால் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சரோ, அதற்கு மாறாக பொத்தாம் பொதுவாக சட்டமன்றத்தில் ஒரு கருத்தை பதிவு செய்வது ஏற்புடையது அல்ல. அமைச்சரின் குற்றச்சாட்டுக்கு நாங்கள் பதில் சொல்ல, சபாநாயகர் எங்களுக்கு அனுமதி வழங்கவில்லை. திமுகவின் கொள்கை பூரண மது விலக்குதான் என்பதில் மாற்று கருத்து இல்லை. அதனால்தான் கடைகள் படி படியாக மூடப்பட்டது. நீங்கள் வெறும் வழக்கு மட்டும்தான் போட்டுள்ளீர்கள் ஒரு மாயத் தோற்றத்தை உருவாக்கி கடந்த ஆட்சியில் ஊழல் நடந்தது போல உருவாக்க நினைக்கிறீர்கள். நீங்கள் நீதிமன்றத்தில் முடிந்தால் நிரூபித்து காட்டுங்கள்” என்றார்.

