“டேபிளில் மிக்சர் வைத்திருந்தால் அதை சாப்பிட்டு இருப்பார்கள்”- பழனிசாமியை கலாய்த்த செந்தில்பாலாஜி
கோவை பீளமேடு பகுதியில் உள்ள தனது அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களைச் சந்தித்தார். இதன்போது, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற பயணம் இன்று தொடங்கப்பட்டுள்ளதாகவும், கோவை மாவட்டத்தில் 11.58 லட்சம் குடும்பங்களை நேரில் சந்தித்து, பா.ஜ.க.வால் தமிழகத்திற்கு இழைக்கப்படும் அநீதிகளை எடுத்துரைக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, “வரும் 3-ம் தேதி கோவை மாவட்டத்தின் 10 சட்டமன்றத் தொகுதிகளிலும், 3,117 வாக்குச்சாவடிகளிலும் ‘ஓரணியில் தமிழ்நாடு’பணிகள் முன்னெடுக்கப்பட உள்ளோம். நாளை மாலை கோவை, திருப்பூர், நீலகிரி ஆகிய மூன்று மாவட்டங்களில் பொதுக்கூட்டங்கள் நடைபெற உள்ளது. மேலும், 10 லட்சத்திற்கும் மேற்பட்டோரை கோவை மாவட்டத்தில் திமுக உறுப்பினர்களாக இணைக்க உள்ளோம். தமிழக இளைஞர்கள் திமுகவுடனே இருப்பதாகவும், புதிய கட்சிகளுக்கு யாரும் செல்லவில்லை. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், தவெகவிலிருந்து திமுகவிற்கு வந்தவர்களைச் சந்தித்தது வழக்கமான நடைமுறையே, 2026 சட்டமன்றத் தேர்தலில் கோவை மாவட்டத்தின் 10 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும்.
முந்தைய அதிமுக ஆட்சியில் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்து அப்போதைய முதல்வர் டிவியில் பார்த்து தெரிந்து கொண்டதாகக் கூறியதை நினைவுகூர்ந்தார். ஆனால், தற்போதைய திமுக அரசு உடனடி நடவடிக்கைகளை எடுத்துள்ளார். தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகை விடுபட்டவர்களுக்கு 10,000 முகாம்கள் நடத்தப்பட உள்ளது. அதிமுக ஆட்சியில் பறிபோன மாநில உரிமைகளை முதல்வர் ஸ்டாலின் மீட்டு வருகிறார். கோவையில் பெரியார் நூலகம், தங்க நகை தொழிற்பேட்டை போன்ற திட்டங்கள் நீண்டகால கோரிக்கைகளாக இருந்து நிறைவேற்றப்பட்டுள்ளது. பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை என்று கூறியவர்கள், இப்போது அமைதியாக அவர்களுடன் இணைந்திருக்கின்றனர். டேபிளில் மிக்சர் வைத்திருந்தால் அதைச் சாப்பிட்டு இருப்பார்கள்...” என கிண்டலாக கூறினார்.


