"67 ஆயிரம் பேர் ஆதாரை இணைக்கவில்லை" - அமைச்சர் செந்தில் பாலாஜி

 
senthil balaji

விவசாயிகளுக்கு 12 மணி நேரம் மட்டுமே மும்முனை மின்சாரத்தை திமுக வழங்கிவிட்டு, 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கவில்லை என எடப்பாடி பழனிச்சாமி கூறுவது, ஆடு நினைகிறது என ஓநாய் கவலைப்படுவது போல் உள்ளது என்று அமைச்சர் செந்தில் பாலாஜி விமர்சித்துள்ளார்.

senthil balaji

சென்னை அண்ணா சாலையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரிய அலுவலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, “தமிழகத்தில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இரண்டு கோடியே 60 லட்சம் பேர் இணைத்துள்ளனர். 67 ஆயிரம் பேர் தங்களது மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கவில்லை. அவர்கள் வீடு தோறும் சென்று இணைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. ஒரே ஆதார் எண்ணில் ஒன்றுக்கும் மேற்பட்ட மின் இணைப்புகள் உள்ளவர்களுக்கு ஒவ்வொரு இணைப்புக்கும் 100 யூனிட் மின்சாரம் இலவசம் என்பதில் எந்த மாற்றமும் இல்லை. இதனை தவறாக புரிந்து கொண்டு சில பகுதிகளில் அதிகாரிகள் தன்னிச்சையாக செயல்படுகின்றனர். மின்சார வாரியம் சார்பாக எவ்வித சுற்றறிக்கையும் வழங்கப்படவில்லை.

திருச்சி மாவட்டம் திருவெறும்பூரில் ஆதார் எண்ணுடன் ஒன்றுக்கு மேற்பட்ட மின் இணைப்புகள் வைத்திருந்த நபர் மீது நடவடிக்கை எடுத்த மின்துறை அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. திமுக ஆட்சியில் ஒன்றரை லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கியுள்ள நிலையில், தற்போது 18 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த அதிமுக ஆட்சியில் தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முதல் நாள் விவசாயிகளுக்கு மும்மனை மின்சாரம் 24 மணி நேரமும் வழங்கப்படும் என அறிவித்துவிட்டு, 12 மணி நேரம் மட்டுமே மும்முனை மின்சாரம் வழங்கினர்.

தற்போது எடப்பாடி பழனிச்சாமி இது குறித்து அறிக்கை வெளியிட்டிருப்பது ஆடு நனைகிறது என ஓநாய் அழுவது போல் உள்ளது. 24 மணி நேரம் விவசாயிகளுக்கு மின் இணைப்புகளை வழங்குவதற்கான கட்டமைப்பு பணிகளை திமுக ஆட்சி செயல்படுத்திவருகிறது. அடுத்த ஆண்டு கோடை காலம் முதல் விவசாயிகளுக்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும். தற்போது மக்களுக்கு வழங்கப்பட்டு வரும் 100 யூனிட் மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும். மின் உற்பத்திக்கு தேவையான 11 நாட்களுக்குரிய நிலக்கரி கையிருப்பில் உள்ளது. 

senthil balaji

தமிழகத்தில் தற்போது கோடை காலம் துவங்க உள்ள நிலையில் மார்ச், ஏப்ரல், மே ஆகிய மாதங்களில் தலா 1565 மெகாவாட் கூடுதலாக பெற டெண்டர் விடப்பட்டுள்ளது.  டெண்டர் விடுவதன் மூலம் ஒரு யூனிட் மின்சாரத்தை எட்டு ரூபாய்க்கு பெற முடியும். இவ்வாறு பெறாமல் எக்ஸ்சேஞ்ச் மூலம் மின்சாரம் பெற்றால் 12 முதல் 20 ரூபாய் வரை ஒரு யூனிட்டுக்கு செலவாகும். டெண்டர் விடுவதால் அரசுக்கு வருவாய் இழப்பு குறைந்துள்ளது. தமிழகத்தின் எதிர்கால மின் தேவையை கருத்தில் கொண்டு 2030-க்குள் மின் உற்பத்தியை இரண்டு மடங்காக்க நடவடிக்கை எடுக்கபட்டு வருகிறது. 

மின்வாரிய ஊழியர்களின் ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. இரு வாரங்களில் ஒப்பந்தம் முடிவு பெறும்” என்றார்.