செந்தில் பாலாஜி அமைச்சராக தடையில்லை.. நிபந்தனைகள் என்னென்ன? - என்.ஆர்.இளங்கோ விளக்கம்

 
செந்தில் பாலாஜி அமைச்சராக தடையில்லை.. நிபந்தனைகள் என்னென்ன? - என்.ஆர்.இளங்கோ விளக்கம்


அடிப்படை உரிமைகளைக் கருத்தில் கொண்டு செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளதாக திமுக மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ தெரிவித்துள்ளார்.  

முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி சட்ட விரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கில், அமலாக்கத்துறையால் கடந்தாண்டு ஜூன் மாதம் 14ம் தேதி  கைது செய்யப்பட்டார். ஓராண்டுக்கும் மேலாக சிறையில் இருந்து வரும் செந்தில் பாலாஜி, கடந்த மார்ச் மாதம் ஜாமீன் வழங்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.  இந்த வழக்கின் இறுதி விசாரணை ஆகஸ்ட்  12ம் தேதி முடிவடைந்த நிலையில், இன்று செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. 

senthil balaji

இதுகுறித்து டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த திமுக மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, “உச்சநீதிமன்றம்  செந்தில் பாலாஜி அவர்களுக்கு ஜாமீன் கொடுத்து உத்தரவு வழங்க இருக்கிறது.  அவர் கடந்த 15 மாதங்களுக்கும் மேலாக வெறும் விசாரணை குற்றவாளியாக இருந்து வந்ததால்,  அடிப்படை உரிமைகளை கருத்தில் கொண்டு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கி இருக்கிறது. 
ஜாமினில் கொடுக்கப்பட்ட நிபந்தனைகள் :
* ரூ. 25 லட்சத்திற்கு  இரண்டு நபர்கள் ஜாமீன் கொடுக்க வேண்டும்.
* ஒவ்வொரு திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமையும் அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் 
* அனைத்து குற்றவியல் நடைமுறைகளுக்கும் ஒத்துழைப்பு தர வேண்டும்;  தேவை இல்லாமல் வாய்தாக்கள் கேட்கக்கூடாது 
* சாட்சிகளை கலைக்கக் கூடாது  

*பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும்; வெளிநாடுகளுக்கு செல்லக்கூடாது. 

supreme court

அண்மைக்காலமாகவே ஒன்றிய அரசால் தொடரப்பட்ட பல்வேறு அமலாக்கத்துறை வழக்குகளில் தனிமனித உரிமைகளை பாதிப்பதாக உச்சநீதிமன்றம் கண்டித்து தான் வந்திருக்கிறது. டெல்லித் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா,  டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்  உள்ளிட்ட மற்ற எல்லா வழக்குகளிலும் ஜாமீனை கொடுக்கக் கூடாது என்கிற அமலாகத்துறையின் வாதத்தை அடக்குமுறை சட்டமாக பார்த்து,  அனைத்து வழக்குகளும் ஜாமின் வழங்கி வந்துள்ளது.  அடிப்படை உரிமைகள் பாதிக்கும் வகையில் ஜாமின் வழங்காமல் இருப்பதை உச்சநீதிமன்றம் தொடர்ந்து கண்டித்து வருகிறது. இன்று மாலை அல்லது நாளை காலை சிறையில் இருந்து செந்தில் பாலாஜி வெளியே வருவார்.  வழக்கு விசாரணை காலதாமதம் ஆகும் என்பதை கருத்தில் கொண்டு உச்சநீதிமன்றம் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கியிருக்கிறது.   செந்தில் பாலாஜி அமைச்சராக சட்டபூர்வமாக எந்த தடையும் இல்லை.” என்று தெரிவித்தார்.