செந்தில் பாலாஜிக்கு நெஞ்சுவலி- மருத்துவமனையில் அனுமதி
திமுக முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் அமலாக்க துறையால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஓர் ஆண்டாக புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து செந்தில் பாலாஜியின் ஜாமின் மனுக்கள் சென்னை முதன்மை அமர் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டு வருகின்றன. ஏற்கனவே இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டு இருந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அவ்வப்போது மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இன்று பிற்பகல் திடீரென ஏற்பட்ட நெஞ்சு வலி காரணமாக புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். மதிய உணவு சாப்பிட்ட பின், நெஞ்சு வலிப்பதாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார். இதனையடுத்து அவரை சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிறைத்துறை அதிகாரிகள் அனுமதித்துள்ளனர்.
ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை மற்றும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு மருத்துவர்களின் அறிவுரையின் பேரில் மீண்டும் சிறைக்கு கொண்டு வரப்படுவார் என சிறைத்துறை தகவல் தெரிவித்துள்ளது.


