செந்தில் பாலாஜி காவல் நிலையத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு..!

 
senthil balaji

த.வெ.க. சட்டமன்ற உறுப்பினர் இளையராஜாவிடம் 35 கோடி ரூபாய் குதிரை பேரம் வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் குமார் ஆகியோர் விசாரணைக்கு ஆஜராகும்படி திருவல்லிக்கேணி காவல்துறையினர் சம்மன் அனுப்பினர். இதைத் தொடர்ந்து, இருவரும் முன்ஜாமீன் கோரி உடனடியாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.

இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் செந்தில் பாலாஜி, அசோக் குமார் ஆகியோர் தினமும் காலை மற்றும் மாலை ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் இருவருக்கும் முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

அதன்படி, செந்தில் பாலாஜியும், அவரது சகோதரர் அசோக் குமாரும் காவல் நிலையத்தில் தினமும் ஆஜராகி கையெழுத்திட்டு வந்தனர். கையெழுத்திட ஆஜராகிய இருவரிடமும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

இந்த நிலையில், சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெறுவதால் முன்ஜாமீன் நிபந்தனைகளை தளர்த்தக் கோரி செந்தில் பாலாஜி மற்றும் அசோக் குமார் ஆகியோர் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்களை நீதிபதி ஜி.கே. இளந்திரையன் விசாரித்தார். அப்போது, திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட குதிரை பேர வழக்கின் விசாரணைக்கு தலைமை நீதிபதி அமர்வு தடை விதித்துள்ளது. இதனால் விசாரணை அதிகாரி முன்பு தினமும் இருமுறை ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனைகளில் இருந்து முழுவதுமாக தளர்வு அளிக்க வேண்டும் என்று செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ வாதிட்டார்.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, செந்தில் பாலாஜி, அசோக் குமார் ஆகிய இருவரும் தினமும் இரண்டு முறை ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையில் இருந்து முழுவதும் விலக்கு வழங்கியதுடன், இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு தேவைப்பட்டால் காவல் துறையினர் சம்மன் அனுப்பி செந்தில் பாலாஜியிடம் விசாரணை மேற்கொள்ளலாம் எனவும் உத்தரவிட்டுள்ளார்.