செந்தில் பாலாஜி வழக்கு: ரிக்வஸ்ட் செய்தும் கேக்கல.. வழக்கை ஒத்திவைத்த நீதிபதிகள்..

செந்தில் பாலாஜி வழக்கு ஆகஸ்ட் 5ஆம் தேதி விசாரிக்கப்படும் என்று உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடியில் ஈடுபட்ட விவகாரம் தொடர்பாக , கடந்த ஆண்டு ஜூன் 14ம் தேதி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். ஓராண்டுக்கும் மேலாக புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவருக்கு அவ்வப்போது உடல்நலக்குறைவு ஏற்படும்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக செந்தில் பாலாஜியின் வழக்கறிஞர் ராம் சங்கர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் அபய் எஸ்.ஒகா, ஏ.ஜி.மாசி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது. இதனிடையே செந்தில் பாலாஜி ஜாமீன் கோரிய மனு நேற்று விசரணைக்கு வந்தபோது நீதிபதிகளின் சில கேள்விகளுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்கவில்லை. இதனையடுத்து நாளை ( அதாவது இன்று) பதிலுடன் வாங்கள் எனக்கூறி நீதிபதிகள் வழக்கை ஒத்திவைத்தனர்.
ஆனால் வழக்கு இன்று விசாரணைக்கு பட்டியலிடப்படாததால் செந்தில் பாலாஜி தரப்பு நீதிபதி அபய்.எஸ்.ஓஹா அமர்வு முன்பு முறையிட்டது. அவரது தரப்பில் மூத்த வழக்கறிஞர் சித்தார்த் லூத்ரா முறையிட்டார். அப்படியெனில் ஆகஸ்டு 5-ம் தேதி இந்த வழக்கை விசாரிக்கிறோம் என்று நீதிபதிகள் தெரிவித்தார்கள். அப்போது ஆகஸ்ட் 5ம் தேதி என்பது மிக நீண்ட காலமாக இருக்கும் எனவும், எனவே இன்றைய தினம் வழக்கை விசாரிக்க வேண்டும் என செந்தில் பாலாஜி தரப்பு கோரிக்கை வைத்தது.
ஆனால் அவர்கள்து கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதிகள், அடுத்த வாரம் முழுவதும் லோக் அதாலத் விசாரணையில் மதியத்திற்கு மேல் அமர போவதால் அடுத்த வாரமும் விசாரிக்க முடியாது என திட்டவட்டமா தெரிவித்ததோடு, வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 5ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.