அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார் செந்தில் பாலாஜி..!
நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்துள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகி கையெழுத்திட்டார்.
முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி சட்ட விரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கில், அமலாக்கத்துறையால் கடந்தாண்டு ஜூன் மாதம் 14ம் தேதி கைது செய்யப்பட்டார். ஓராண்டுக்கும் மேலாக சிறையில் இருந்து வந்த செந்தில் பாலாஜி, கடந்த மார்ச் மாதம் ஜாமீன் வழங்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கின் இறுதி விசாரணை ஆகஸ்ட் 12ம் தேதி முடிவடைந்த நிலையில், நேற்று செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதனையடுத்து சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர், 471 நாட்களுக்குப் பிறகு நேற்று மாலை வெளியே வந்தார்.
காலை முதலே முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி வரவேற்பதற்காக புழல் மத்திய சிறை வளாகத்தில் திமுக தொண்டர்களும், நிர்வாகிகளும் குவிந்து வந்தனர். செந்தில் பாலாஜியை வரவேற்பதற்காக திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளும் புழல் மத்திய சிறைக்கு வந்திருந்தனர். பின்னர் வெளியே வந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு, கட்சி நிர்வாகிகள் சால்வை அணிவித்தும், ஆளுயர மாலை அணிவித்தும், பூக்களை தூவியும், பட்டாசு வெடித்தும் உற்சாக வரவேற்பளித்தனர். சிறையில் இருந்து வெளியே வந்த அவர் நேரடியாக கலைஞர் நினைவிடம் மற்றும் அண்ணா நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.
உச்சநீதிமன்றம் விதித்த நிபந்தனையின் படி ஒவ்வொரு திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமையும் அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும். ஆகையால் அமலாக்கத்துறை அலுவலகத்தில் இன்று காலை ஆஜராகி செந்தில் பாலாஜி கையெழுத்திட்டார். இதற்காக நேற்றிரவு சென்னையிலேயே தங்கிய செந்தில் பாலாஜி, இன்று இரவு டெல்லி பயணம் முடித்து திரும்பும் முதலமைச்சரையும் சந்தித்த பின்னர் கரூர் செல்வார் என கட்சி நிர்வாகிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.