சவுக்கு சங்கர் மீது பாய்ந்த குண்டாஸ் - இன்று மதியம் தீர்ப்பு
சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டம் பாய்ந்ததை எதிர்த்து தொடர்ந்த வழக்கில் இன்று மதியம் தீர்ப்பு வழங்குகிறது சென்னை உயர்நீதிமன்றம்.
பிரபல ஊடகவியலாளர் சவுக்கு சங்கர் பெண் காவலர்களை இழிவுப்படுத்தி யூடியூப் சேனலுக்குப் பேட்டி கொடுத்ததாக கோவை போலீசார் கடந்த 5 ஆம் தேதி தேனியில் அவரை கைது செய்தனர். பின்னர், அவர் தனது வாகனத்தில் 500 கிராம் கஞ்சா வைத்திருந்ததாக வழக்குப்பதியப்பட்டுள்ளது. கோவை, தேனி, திருச்சி, சேலம், சென்னை ஆகிய மாவட்டங்களில் மொத்தம் 7 வழக்குகள் பதியப்பட்டுள்ளது. கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த சவுக்கு சங்கரை சிறைக் காவலர்கள் தாக்கியதாக புகார் எழுந்த நிலையில், அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.சவுக்கு சங்கர் விவகாரத்தில் நீதிமன்றத்தில் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ததை எதிர்த்து அவரது தாயார் வழக்கு தொடர்ந்தார்.

இந்நிலையில் யூடியூபர் சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவை எதிர்த்த வழக்கின் மனு மீதான உத்தரவை பிற்பகலுக்கு தள்ளிவைத்தது சென்னை உயர் நீதிமன்றம். தமிழக அரசு பதில்மனு தாக்கல் செய்வதற்கு முன், இறுதி விசாரணை நடத்தலாமா என்ற விஷயத்தில் நீதிபதிகள் இடையே மாறுபட்ட கருத்து நிலவுகிறது. தமிழக அரசு பதில்மனு தாக்கல் செய்வதற்கு முன் வழக்கை இறுதி விசாரணைக்கு எடுக்க அவசியம் இல்லை என்று நீதிபதி பாலாஜி தெரிவித்துள்ளார். அதேசமயம் தமிழக அரசு பதில்மனு தாக்கல் செய்யாவிட்டாலும் இன்றே இறுதி விசாரணை நடத்தலாம் என்று நீதிபதி சுவாமிநாதன் கூறியுள்ளார்.

இதனிடையே சவுக்கு சங்கர் விவகாரத்தில் நீதிமன்றத்தில் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ததை எதிர்த்து அவரது தாயார் வழக்கு தொடர்ந்துள்ள நிலையில், அதை எதிர்த்து மூத்த பத்திரிக்கையாளர் சந்தியா ரவிசங்கர் நீதிபதிகளுக்கு தனது வழக்கறிஞர் மூலம் கடிதம் ஒன்றை அளித்துள்ளார்.


