திருச்செந்தூரில் பரபரப்பு..! வந்திருப்பது அமைச்சர்னு தெரியாம விஐபி தரிசனத்துக்கு பேரம் பேசிய அர்ச்சகர்கள்!

 
1

இந்து சமய அறநிலைய அமைச்சராக ரமேஷ் பொறுப்பேற்றது முதலே, மாநிலம் முழுவதும் உள்ள பல்வேறு கோயில்களில் அதிரடி ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார். 

இந்நிலையில் திருச்செந்தூர் முருகன் கோயிலில் சாமி தரிசனம் மற்றும் அர்ச்சனை என பல்வேறு வடிவங்களில் பக்தர்களிடமிருந்து பணம் பறிக்கப்படுவதாக நீண்ட காலமாக பல புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளன. சுவாமி தரிசனம், விஐபி சாமி தரிசனம் மற்றும் அர்ச்சனை என அனைத்து கோயில் நடைமுறைகளுக்கும் விதிகளை மீறி, அர்ச்சர்கள் மற்றும் கோயில் ஊழியர்கள் பணம் பறிப்பில் ஈடுபடுவதாக பக்தர்கள் நீண்டகாலமாகவே குற்றம்சாட்டி வருகின்றனர். இதனிடையே, வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு, பக்தர்கள் நலன் கருதி ரூ.100 கட்டண தரிசனம் முறையும் ரத்து செய்யப்பட்டு கட்டணமில்லா தரிசன முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று காலை திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு பக்தரைப் போல  (மாறுவேடத்தில்) ஆய்வுக்கு சென்றிருந்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷிடம்  ரூபாய்.4000 பெற்றுக் கொண்ட பின்னரே அவரை அர்ச்சகர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதித்துள்ளனர்.அவர் அறநிலையத்துறை அமைச்சர் என தெரிந்த பின் மன்னிப்பு கேட்டுள்ளனர். 


நடந்து என்ன..? 

இன்று காலை திருச்செந்தூர் கோயிலுக்கு பொதுமக்களில் ஒருவராக சாதாரண உடையணிந்து அமைச்சர் ரமேஷ் கோயிலுக்கு சென்றுள்ளார். உடன் அதிகாரிகள் யாரையும் அவர் அழைத்துச் செல்லாமல், உதவியாளர் உடன் மட்டும் சென்றதாக கூறப்படுகிறது. அப்போது அமைச்சரை அடையாளம் தெரியாமல் அவரது உதவியாளரை அணுகிய அர்ச்சகரில் ஒருவர், நான்காயிரம் ரூபாய் லஞ்சம் கொடுத்தால் விரைவு தரிசனத்திற்கு அழைத்துச் செல்வதாக தெரிவித்துள்ளார். தொடர்ந்து, அவருடன் தொடர்புடைய அனைவரையும் கூண்டோடு பிடிப்பதற்காக அமைச்சரும் ஜி-பே மூலம் பணத்தை செலுத்தி விரைவு தரிசனத்திற்காக சென்றுள்ளார். அப்போது பணம் பெற்ற அர்ச்சகர் மற்றும் அவருடன் தொடர்புடைய அனைவரையும் கையுள் களவுமாக பிடித்துள்ளார். மேலும், கைப்பட விளக்க கடிதமும் எழுதி வாங்கியுள்ளார். மேலும் அவர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுப்பதற்கான விசாரணையை முடுக்கி விடவும் அமைச்சர் உத்தரவிட்டுள்ளாராம்.

இதனை தொடர்ந்து, திருச்செந்தூர் கோயிலில் உள்ள நிர்வாக அலுவலகத்திலும் அமைச்சர் ரமேஷ் ஆய்வு மேற்கொண்டார். பின்பு அங்கு பணியாற்றி வரும் அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அனைவரையும் வரவழைத்து விசாரணை நடத்தும் பணியிலும் ஈடுபட்டுள்ளாராம். இதற்காக கோயில் ஊழியர்கள் அனைவரையும் அங்கு வரும்படி அழைப்பு விடுத்துள்ளாராம். இதன் மூலம் நீண்டகாலமாக பொதுமக்கள் முன்வைத்து வந்த குற்றச்சாட்டுகள் தற்போது நிரூபனமாகியுள்ளது.