தமிழக அரசியலில் பரபரப்பு..! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உட்பட 7 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை எஃப்.ஐ.ஆர்!
கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் டாஸ்மாக் டெண்டர் மதுபான கொள்முதல் உள்ளிட்ட பணிகளில் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் முறைகேடு நடந்திருப்பதாக அமலாக்கத்துறை பரபரப்பு குற்றச்சாட்டு முன்வைத்திருந்தது. அதன் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் புதிதாக வழக்கு ஒன்றை பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டனர்.
இந்த வழக்கின் அடிப்படையில் சென்னை, கரூர், ஈரோடு உள்ளிட்ட தமிழ்நாடு முழுவதும் சுமார் 41 இடங்களில் இன்று லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர். முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவர் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
மேலும் சென்னை ஆழ்வார்பேட்டையில் தனியார் விடுதியில் தங்கியிருந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் சுமார் 3 மணி நேரம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இந்த நிலையில், டாஸ்மாக் நிறுவனத்தில் பார் உரிமம் வழங்குதல், போக்குவரத்து ஒப்பந்தங்கள், மதுபான கொள்முதல் மற்றும் விற்பனை உள்ளிட்டவற்றில் முறைகேடுகள் நடைபெற்றதாக கூறப்படும் புகாரில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்ட ஏழு பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதுதொடர்பாக முதல் தகவல் அறிக்கை தற்போது வெளியாகி உள்ளது.
அதில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, முன்னாள் டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர் விசாகன் ஐஏஎஸ், முன்னாள் முதுநிலை மண்டல மேலாளர்கள் ராமதுரை முருகன், பன்னீர்செல்வம், செந்தில் பாலாஜியின் முன்னாள் தனி உதவியாளர் பாஸ்கர், செந்தில் பாலாஜியின் நெருங்கிய கூட்டாளிகள் ரத்தீஷ்ராஜ், சண்முகவேல், கார்த்திக் ஆகிய ஏழு பேரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
முதல் தகவல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள குற்றச்சாட்டுக்கள்
தமிழ்நாடு முழுவதும் சுமார் 5380 டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகளும், 3,240 மதுபான பார்களும் இயங்கி வருகின்றன. இவற்றில் கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் 2021 ஆம் ஆண்டு 857 பார்களுக்கு டெண்டர் கோரப்பட்டு கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி டெண்டர் இறுதி செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
டெண்டர் விதிமுறைகளின் படி டெண்டர் இறுதி செய்யும்போது அனைத்து விண்ணப்பதாரர்களும் அதை பார்வையிட அனுமதிக்கப்பட வேண்டும். ஆனால் குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் வாய்ப்பு வழங்கப்பட்டு, அவர்களுக்கு சாதகமாக விதிமுறைகள் மீறப்பட்டதாக முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் டெண்டரில் பங்கேற்றவர்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டதற்கான அறிகுறிகள் இருந்ததாகவும், ஒரே வங்கியில் இருந்து தொடர்ச்சியான வரிசை எண்களைக் கொண்ட டி.டி தாக்கல் செய்யப்பட்டிருப்பது இதற்கு ஆதாரமாக இருப்பதாகவும் எஃப்.ஐ.ஆரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் கோவை, நீலகிரி, திருப்பூர், நாமக்கல், ஈரோடு, கரூர் மாவட்டங்களில் உள்ள 857 பார்களில், 284 பார்கள் மூடப்பட்டதாக கணக்கில் காட்டப்பட்டு அவை உரிமம் புதுப்பிக்கப்படாமலேயே தொடர்ந்து செயல்பட்டதாகவும் லஞ்ச ஒழிப்புதுறை குற்றம் சாட்டியுள்ளது.
மேலும் மாதாந்திர டிடி செலுத்தாத பார்களை மூடிவிட்டு புதிதாக டெண்டர் நடத்த வேண்டும் என்ற விதிமுறை இருந்தும் டாஸ்மாக் அதிகாரிகள் பார் உரிமையாளர்களுடன் இணைந்து அந்த விதிமுறைகளை பின்பற்றவில்லை. இதன் காரணமாக கடந்த 2022-23 ஆம் ஆண்டில் மட்டும் கோவை வடக்கு மாவட்டத்தில் 17.27 கோடியும், கோவை தெற்கு மாவட்டத்தில் 13.58 கோடியும், நீலகிரி மாவட்டத்தில் 1.95 கோடியும் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டதாக முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் டாஸ்மாக் நிறுவனத்தின் 45 கிடங்குகளுக்கான போக்குவரத்து டெண்டர் நடைமுறையிலும் முறைகேடு நடைபெற்றுள்ளது. சன் டிரான்ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவர் 16 டாஸ்மாக் கிடங்குகளுக்கான டெண்டரில் பங்கேற்று, தலா ரூ.50,000 மதிப்பிலான 16 டிடி சமர்ப்பித்ததாகக் கூறப்பட்டுள்ளது.
அவற்றில் ஒரு டெண்டர் மட்டுமே அவருக்கு ஒதுக்கப்பட்ட நிலையில், ஒரு டி.டி. மட்டும் டாஸ்மாக் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டதாகவும், மீதமிருந்த 15 டி.டிகளில் 6 டி.டிகள் மட்டுமே அவரிடம் திருப்பி வழங்கப்பட்டுள்ளது. மீதமிருந்த 9 டி.டிகள், பிற போக்குவரத்து நிறுவனங்களுக்கு டெண்டர் வழங்குவதற்காக பயன்படுத்தப்பட்டதாகவும், இதன் மூலம் டெண்டர் நடைமுறையில் முறைகேடு மற்றும் பணப் பரிவர்த்தனைகள் நடைபெற்றதாகவும் முதல் தகவல் அறிக்கையில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. மேலும் டாஸ்மாக் நிறுவனம் ஆண்டுதோறும் சுமார் 100 கோடி ரூபாயை போக்குவரத்து நிறுவனங்களுக்கு செலுத்தி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் சிவகங்கை மாவட்டத்தில் ஒருவர் தனது கணக்கிலிருந்து 25 லட்சம் செலுத்தி 42 டி.டி.க்கள் எடுத்ததாகவும், அந்த டி.டிகள் பார் டெண்டருக்கு பயன்படுத்தப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. அவர் சிவகங்கை மாவட்டத்தில் எந்தப் பார் டெண்டருக்கும் விண்ணப்பிக்கவில்லை என்றும், கார்த்திக் என்பவரின் அறிவுறுத்தலின்பேரில் அந்த டி.டிகள் எடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரூர் மாவட்டத்தில் உள்ள பார்கள் அனைத்தும் மூலனூர் கார்த்திக் மற்றும் அவருடன் தொடர்புடைய குழுவினரால் நடத்தப்பட்டதாகவும், தமிழகம் முழுவதும் தங்களுக்கு வேண்டிய நபர்களுக்கு பார் டெண்டர்களை ஒதுக்குமாறு டாஸ்மாக் அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்ததாகவும் லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது.
மேலும் கோவை, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அரசியல் பிரமுகர்கள் சிலர் பார் உரிமையாளர்களிடம் கட்சிப் பணம் என்ற பெயரில் பணம் வசூலித்துள்ளனர். அதேபோன்று பார் உரிமையாளர்களிடம் இருந்தும் சட்டவிரோதமாக பணம் வசூலிக்கப்பட்டதாகவும் லஞ்ச ஒழிப்புத்துறை குற்றஞ்சாட்டியுள்ளது.
மேலும் 2021 முதல் 2025-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களின் அதிகபட்ச சில்லறை விலையை விட கூடுதல் தொகை வசூலிக்கப்பட்டதாகவும், குறிப்பாக வெளிநாட்டு மதுபானங்களுக்கு 500 ரூபாய் வரை கூடுதலாகவும், மதுபானத்தின் வகை மற்றும் பிராண்டை பொறுத்து ரூபாய் 10 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை கூடுதலாக வாடிக்கையாளர்களிடம் வசூலிக்கப்பட்டதாகவும் லஞ்ச ஒழிப்பு துறை குற்றம்சாட்டியுள்ளது.
டாஸ்மாக் உயர் அதிகாரிகள் சில குறிப்பிட்ட டிஸ்டில்லரி நிறுவனங்களுக்கு சாதகமாக செயல்பட்டதாகவும், சில்லறை விற்பனைக் கடைகளில் இருந்து கோரிக்கை வராத நிலையிலும் குறிப்பிட்ட நிறுவனங்களின் மதுபானங்கள் வழங்கப்பட்டுள்ளன. இது குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு ஆதரவாகவும், முறைகேடான நடவடிக்கையாகவும் இருந்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை தமது எஃப்ஐஆரில் தெரிவித்துள்ளது.
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் முன்னாள் தனி உதவியாளர் பாஸ்கர் மற்றும் ரதீஷ் ராஜ் சண்முகவேல் ஆகியோர் டாஸ்மாக் அதிகாரிகளின் பணியிட மாற்றம் மற்றும் பதவி நியமனங்களில் தலையிட்டு, அதன்மூலம் முறைகேடான பலன்களைப் பெற்றுள்ளார்கள். குறிப்பாக அப்போதைய டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர் விசாகன் ஐஏஎஸ் அவருடைய அறிவுறுத்தல்களைப் பின்பற்றியதாகவும் லஞ்ச ஒழிப்புத்துறை குறிப்பிட்டுள்ளது.
டாஸ்மாக் அதிகாரிகள், தனியார் நபர்கள் மற்றும் நிறுவனங்களுடன் இணைந்து, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் செல்வாக்கின் கீழ் இந்த முறைகேடுகள் நடைபெற்றதற்கான முதற்கட்ட ஆதாரங்கள் இருப்பதாகவும் லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது.
அதிகாரிகள் தங்களது பதவியை தவறாகப் பயன்படுத்தி, தனியார் நபர்கள் மற்றும் மதுபான உற்பத்தி, போக்குவரத்து, பாட்டில் விநியோக நிறுவனங்களிடமிருந்து முறைகேடான பலன்களைப் பெறும் நோக்கில் செயல்பட்டதாகவும், இதனால் அரசுக்கு கணிசமான இழப்பு ஏற்பட்டதாகவும் முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

