தமிழகத்தில் பரபரப்பு..!! மீண்டும் ஒரு கைதி தப்பியோட்டம்..!!
மதுரையில் உள்ள நீதிமன்றத்தில் இன்று (நவ.12) தண்டனை விவரம் அறிவிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே கைதி ஒருவர் தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், சிறுமலை அருகே இருக்கும் செம்மலை பகுதியைச் சேர்ந்தவர் ராஜா. இவர், கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் இன்று மாலை கைதி ராஜா, மதுரை மாவட்ட போதை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். மதுரை மாவட்ட போதை தடுப்பு சிறப்பு நீதிமன்றம், நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்த ராஜாவை குற்றவாளி என அறிவித்து தண்டனை விவரங்களை அறிவித்தது.
தீர்ப்பு வந்ததும், நீதிமன்றத்தில் இருந்து குற்றவாளி ராஜா காவல்துறை கட்டுப்பாட்டில் இருந்து தப்பி ஓடியுள்ளார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தப்பி ஓடிய கைதியை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள். தேனி கிளை சிறையில் இருந்து கடந்த மாதம் 17 கைதிகள் தப்பி ஓடியது தமிழகத்தையே உலுக்கியது. இந்த சம்பவத்தையடுத்து தொடர்ந்து பல்வேறு இடங்களில் போலீஸ் பிடியில் இருந்து கைதிகள் தப்புவது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

