புதுக்கோட்டையில் பரபரப்பு..!! தவெக வேட்பாளர் அறைக்குள் அடைப்பு..!!
புதுக்கோட்டையில் முதல்வர் விஜய்யை சந்திக்க முயன்ற தவெக வேட்பாளர் கே.எம்.ஷெரீப்பை அதிகாரிகள் அறைக்குள் அடைத்து வைத்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
முதல்வர் விஜய் அரசு சார்பில் பயனாளிகளுக்கு நலத்திட்டம் வழங்குவதற்காக புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வருவதை அறிந்த தவெக வேட்பாளர் கே.எம்.சரீப் முதல்வரை சந்திப்பதற்காக காங்கிரஸ் பிரமுகருடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்திருந்தார்.அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்தவர்கள் முதல்வரை சந்திக்க அனுமதி இல்லை என்று கூறி அவரையும் அவருடன் வந்தவர்களையும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒரு அறையில் வைத்து பூட்டி சிறைப்படுத்தியுள்ளனர். இது குறித்து தவெக வேட்பாளர் கே.எம்.சரீப் சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் கே.எம்.சரீப் முகநூலில் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது: “இன்றைய தினம் காலையிலே ஒரு 9:30 மணியளவிலே புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திற்கு முதல்வர் ச.ஜோசப் விஜய் இங்கே வருகை தந்திருக்கிறார் என்கிற செய்தி கேள்விப்பட்டு, அவரிடத்திலே ஒரு புத்தகத்தைக் கொடுப்பதற்காக, புதுக்கோட்டை மக்களுடைய பிரச்னைகளைச் சொல்வதற்காக எனக்கு வழங்கப்பட்டிருந்த வி.ஐ.பி பாஸ் உடன் நானும், என்னோடு எங்கள் கட்சியின் மாவட்டச் செயலாளர் யூசுப் ராஜா, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் சந்திரசேகரன், அன்புச் சகோதரர் இப்ராஹிம் பாபு இவர்களோடு சென்றோம்.
அங்கே மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்துக்குப் பக்கத்திலே அந்த மாடியில முதல்வர் ஜோசப் விஜய் பயனாளிகளைச் சந்திப்பதற்காக ஒரு அறை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அங்கே போனோம். பயனாளிகளைத் தவிர யாருக்கும் அனுமதி இல்லை என்று சொன்னார்கள்; எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கு மட்டும்தான் அனுமதி என்று சொன்னார்கள்.
நான் சொன்னேன், 'இதுமாதிரி நான் ஒரு வேட்பாளர், புதுக்கோட்டை தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளர், முதலமைச்சரை அவசியம் நான் பார்க்க வேண்டும்' என்று சொன்னேன். அங்கே இருந்த டி.ஆர்.ஓ குழந்தைசாமியும், டி.ஐ.ஜி என்று நினைக்கிறேன் காவல்துறை அதிகாரி ஈஸ்வரன், இரண்டு பேரும் 'பக்கத்து அறையிலே போய் உட்காருங்கள்' என்று சொன்னார்கள்.
நானும் மூன்று பேரும் போய் உட்கார்ந்தோம். அங்கே அதிகாரிகள் ஏராளமான பேர் இருந்தார்கள். கொஞ்ச நேரத்தில் வெளிக்கதவு பூட்டப்பட்டது. 9:45-லிருந்து 1:30 மணி வரைக்கும் கிட்டத்தட்ட 3 மணி நேரம் என்னை அவர்கள் தடுத்து நிறுத்த வேண்டும் என்பதற்காக, முதலமைச்சரை சந்திக்கக் கூடாது என்பதற்காக என்னோடு வந்த மூன்று பேர் - அதில் 2 பேர் காங்கிரஸ் தலைவர்கள், மற்ற அதிகாரிகள் - அங்கே கழிவறை வசதி கூட கிடையாது, குடிக்கத் தண்ணீர் கிடையாது, மூன்று மணி நேரம் எங்களை அந்த சின்ன அறையிலே போட்டு அடைத்து வைத்திருந்தார்கள்.
முதலமைச்சர் ஜோசப் விஜய் போனதற்குப் பின்னால எங்களை வெளியே அனுப்பி வைத்தார்கள். நாங்கள் முதலமைச்சரை சந்திக்கக் கூடாது என்பதற்காக அதை ஆட்சியர் சொன்னாரா என்னவென்று தெரியவில்லை. டி.ஆர்.ஓ-வும் அந்த டி.ஐ.ஜி-யும் சேர்ந்து பூட்டி வைத்தார்கள். நாங்கள் ஒன்றும் திருடுவதற்காகவோ கொள்ளையடிக்கிறதுக்காகவோ போகவில்லை. முதலமைச்சரைச் சந்திப்பதற்காகப் போனோம். குறைந்தபட்சம் நான் இந்தத் தொகுதியினுடைய வேட்பாளர், என்னிடத்திலே அவர்கள் 'நீங்கள் முதலமைச்சரைச் சந்திக்க முடியாது, வெளியே செல்லுங்கள் என்று சொன்னால் வந்திருப்போம். எங்களை உள்ளே போட்டு 3 மணி நேரம் பூட்டி வைப்பது என்ன நியாயம் என்று நான் கேட்கிறேன்.
நிச்சயமாக முதலமைச்சர் ஜோசப் விஜயை நான் சந்திப்பேன், என்னுடைய குறையைத் தெரிவிப்பேன்; எப்படிச் சந்திப்பது என்று எனக்குத் தெரியும். நான் ஒன்றும் பாரம்பரிய அரசியல்வாதி எல்லாம் கிடையாது, நான் ஒரு போராட்டக்காரன். மக்களுடைய பிரச்சனைகளுக்காகப் போராடுபவன், அரசாங்கத்தில என்னுடைய கருத்துகளைச் சொல்பவன். நான் ஒன்றும் சட்டவிரோதமான மோசமான மனிதன் கிடையாது; நான் சைக்கிளில் கூட லைட் இல்லாமல் போகமாட்டேன், சட்டத்தை அப்படி மதிக்கிற மனிதன். என்னைப்போய் 3 மணி நேரம் எதுக்கு அடைத்து வைத்திருந்தார்கள் என்பதை மாவட்ட ஆட்சித் தலைவரும் அந்த காவல்துறை அதிகாரியும் சொல்ல வேண்டும்; அவர்கள் விளக்கம் சொல்லும் வரை நான் சும்மா விடப்போவதில்லை, தொடர்ந்து என்னுடைய போராட்டத்தை நடத்திக்கொண்டே இருப்பேன், முதலமைச்சரைச் சந்தித்து இதைப் பற்றிச் சொல்வேன்.” என்று கே.எம்.சரீப் பேசியுள்ளார்.

