சென்னையில் பரபரப்பு..! ஓடும் விமானத்தின் அவசர கால கதவை திறந்து குதித்த பயணி!

 
1

சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு 217 பயணிகளுடன் சார்ஜாவிலிருந்து ஏர் அரேபியன் பயணிகள் விமானம் வந்தது. இந்த விமானம் டாக்ஸி வேயில் வந்து நிற்க தயாரானது. அப்போது அந்த விமானத்தில் பயணம் செய்த புதுக்கோட்டை சேர்ந்த முகமது நிஜாமுதீன் ஷெரீப் (30) திடீரென விமானத்தின் அவசரகால கதவைத் திறந்து கீழே குதித்து அங்கிருந்து ஓடி உள்ளார். இதனால் விமானத்தில் இருந்த மற்ற பயணிகள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.

இதை அடுத்து விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் மத்திய தொழிற்பாதுகாப்புப் படை அதிகாரிகள் விரைந்து சென்று விமானத்தின் அவசர கதவு வழியாக வெளியே குதித்து தப்பி ஓடிய பயணியை சுற்றி வளைத்துப் பிடித்தனர். இதனால் அந்த விமானம் குறிப்பிட்ட நேரத்தில் நடைமேடைக்கு கொண்டு வர முடியாமல் டாக்ஸி வேயில் நிறுத்தப்பட்டது.இதன் காரணமாக லண்டனில் இருந்து சென்னை வந்த பிரிட்டிஷ் ஏர்வேஸ் பயணிகள் விமானம் சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க முடியாமல் பெங்களூரு விமான நிலையத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டது.

முகமது நிஜாமுதீன் ஷெரீப்பை தனி அறையில் வைத்து விசாரணை செய்தபோது அந்த நபர் முன்னுக்குப் பின் முரணாக பேசியும், புலம்பிக் கொண்டும், தன்னை யாரோ கொலை செய்து விடுவார்கள் என்ற அச்சத்தில் கீழே குதித்ததாகவும் தெரிவித்துள்ளார். இதனால் பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு மேலும் சந்தேகம் வந்துள்ளது. அவர் உண்மையில் மனநலம் பாதிக்கப்பட்டவரா? அல்லது தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த நபரா? வேறு ஏதேனும் குற்றப் பின்னணி கொண்டவரா? போன்ற பல்வேறு கோணங்களில் துருவி துருவி தீவிர விசாரணை நடத்தினர்.

மேலும் விமானத்தின் அவசர கால கதவை திறந்து கீழே குதித்த பயணிக்கு லேசான காயங்கள் ஏற்பட்ட நிலையில், அவருக்கு சென்னை விமான நிலைய மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு, அவரிடம் தொடர்ந்து பாதுகாப்பு துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.