சென்னையில் பரபரப்பு..! கட்டுமான பணிக்காக பள்ளம் தோண்டிய போது கசிந்த மீத்தேன் வாயு..!!

 
1

சென்னை மணலி, நெடுஞ்செழியன் தெரு சந்திப்பில், 4.75 கோடி ரூபாய் செலவில், புதிய பேருந்து நிலையம் கட்டும் பணி நடந்து வருகிறது. இதன் கட்டுமான பணிக்காக, ராட்சத ‘ட்ரில்லிங்’ இயந்திரத்தால் தரையை துளையிடும்போது, நிலத்திற்கடியில் ஏற்கனவே புதைக்கப்பட்டுள்ள மீத்தேன் வாயு செல்லும் ராட்சத குழாயில் உடைப்பு ஏற்பட்டது.

இதன் காரணமாக, அதிக அழுத்தத்துடன் மீத்தேன் வாயு வெளியேறியது. இதனால், அதிர்ச்சியடைந்த ஊழியர்கள், அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். முக்கிய சந்திப்பு என்பதால், மக்களிடையே பதற்றமான சூழல் நிலவியது. தகவலறிந்த மணலி தீயணைப்பு நிலைய அலுவலர் முருகனாந்தம் தலைமையிலான வீரர்கள், அங்கு முகாமிட்டு, தண்ணீரை பீய்ச்சி அடித்தும், மணலை நிரப்பியும், வெளியேறும் வாயுவை கட்டுப்படுத்த முயற்சித்தனர். ஆனால், அழுத்தம் காரணமாக வாயு வெளியேறும் அளவு குறையவில்லை.

தகவலறிந்த குழாய் பதிப்பு நிறுவனம், வாயு வெளியேறும் பிரதான ‘வால்வை’ அடைத்ததால், வாயு வெளியேறும் அளவு படிப்படியாக கட்டுப்படுத்தப்பட்டது. மணலி போலீசார் விசாரித்து வருகின்றனர். மீஞ்சூர், கொண்டக்கரையில் இருந்து கோயம்பேடு வரை நிலத்திற்கடியில், ‘டொராண்டோ’ எனும் மீத்தேன் இயற்கை வாயு செல்லக்கூடிய குழாய் புதைக்கப்பட்டு உள்ளது. இந்த குழாயில் உடைப்பு ஏற்பட்டிருந்தாலும், உரிய நேரத்தில் வாயு கசிவு கட்டுப்படுத்தப்பட்டதால், யாருக்கும் பாதிப்பில்லை.

திருவள்ளூர் மாவட்டம் கன்னிகைபேரில், இறால் பதப்படுத்தும் ஆலையில் அம்மோனியா வாயு கசிந்து, பலர் உயிரிழந்த நிலையில், மணலியில் மீத்தேன் வாயு கசிவு ஏற்பட்டதால், பரபரப்பு ஏற்பட்டது.