திமுக மூத்த தலைவர் எல்.கணேசன் காலமானார்
மொழிபோர் தளபதி என அழைக்கப்படுபவரும், திமுக மூத்த தலைவருமான எல்.கணேசன்(92) உடல்நலக் குறைவால் காலமானார்

தி.மு.க முன்னோடி எல். கணேசன் 92 வயது வயது மூப்பு காரணத்தால் காலமானார். மொழிப்போர் தளபதி என அழைக்கப்படும், தி.மு.க உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினர் எல்.கணேசன், 3 முறை ஒரத்தநாடு தொகுதி எம்.எல்.ஏ வாகவும், எம்.எல்.சி யாகவும், மாநிலங்களவை எம்.பியாகவும், திருச்சி மக்களவை எம்.பி யுமாகவும் பணியாற்றிய எல்.கணேசனின் உடல் தஞ்சாவூர் பாலாஜி நகரில் உள்ள அவரது இல்லத்தில் தஞ்சை மாவட்ட தி.மு.க செயலாளர் துரை.சந்திரசேகரன் எம்.எல்.ஏ மற்றும் துணை மேயர் அஞ்சுகம் பூபதி உள்ளிட்ட தி.மு.க நிர்வாகிகள், தொண்டர்கள் அஞ்சலி செலுத்திவருகின்றனர். முதல்வர் திரு. மு.க.ஸ்டாலின் இன்று மதியம் எல். கணேசனின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வர உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில், “மொழிப்போர்க் களத்தில், இந்திமொழியின் ஆதிக்கத்திற்கு எதிராகப் புறப்பட்ட மாணவர் படையின் தளகர்த்தர்களில் ஒருவரும் - கழக உயர்நிலைச் செயல்திட்டக் குழு உறுப்பினருமான திரு. எல். கணேசன் அவர்கள் மறைந்த செய்தியால் பெரிதும் துயருற்றேன். சட்டமன்றம் - சட்டமேலவை - நாடாளுமன்றம் என முழங்கிய அவரை இனி நாம் காண முடியாது என்பதை எண்ணும்போதே உள்ளம் வேதனையால் துடிக்கிறது. தலைவர் கலைஞர் அவர்களின் பாசத்தைப் பெற்ற 'எல்.ஜி.' அவர்கள், 1989-இல் கலைஞர் முதலமைச்சராக இருந்தபோது, அவரது பாராளுமன்றச் செயலாளராகவும் இருந்தார். நான் தஞ்சை மாவட்டத்திற்குச் செல்லும்போதெல்லாம் தவறாது அவரது இல்லத்திற்குச் செல்வேன்; அவரும் புன்சிரிப்புடன் வரவேற்று, நம் திராவிட மாடல் அரசின் திட்டங்கள் மக்களிடம் பெற்றுள்ள வரவேற்பு குறித்து மகிழ்ச்சி பொங்கப் பெருமையோடு சொல்வார். திராவிட இயக்கக் கொள்கைகள் மீது பற்றுகொண்டு, மக்களின் நன்மதிப்பைப் பெற்று அரசியல் களத்தில் பணியாற்றிய அவர் என்றும் நம் நெஞ்சங்களில் நிறைந்திருப்பார். அவரது பிரிவால் வாடும் கழக உடன்பிறப்புகள், குடும்பத்தினர், நண்பர்கள் என அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.


