பாஜக மூத்த தலைவர் கே.எஸ். ஈஸ்வரப்பா அதிரடி நீக்கம்..!

 
1

கர்நாடகாவின் ஹவேரி மக்களவைத் தொகுதியில் தனது மகன் கே.ஈ.கந்தேஷ் போட்டியிட வாய்ப்பு கோரி இருந்தார். எனினும், மாநில பாஜக தலைவர் பி.ஓய்.ராகவேந்திரா வாய்ப்பு வழங்க மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

இதனால் அதிருப்தி அடைந்த ஈஸ்வரப்பா, ராகவேந்திராவுக்கு எதிராக கட்சி மேலிடத்தில் புகார் அளித்தார். மேலும், ராகவேந்திரா போட்டியிடும் சிவமோகா தொகுதியில் அவரை எதிர்த்துப் போட்டியிடப் போவதாகவும் ஈஸ்வரப்பா அறிவித்தார்.

சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிடும் முடிவைக் கைவிடுமாறு ஈஸ்வரப்பாவை தொலைபேசியில் அழைத்துப் பேசிய மத்திய அமைச்சர் அமித் ஷா அறிவுறுத்தினார். மேலும், தன்னை டெல்லியில் ஏப்ரல் 3-ஆம் தேதி சந்திக்குமாறும் கே.எஸ்.ஈஸ்வரப்பாவை மத்திய அமைச்சர் அமித் ஷா கேட்டுக் கொண்டார். 

இந்த நிலையில் கட்சியில் இருந்து நீக்கிப் பாருங்கள் என சவால் விட்ட ஈஸ்வரப்பாவை கட்சியிலிருந்து 6 ஆண்டுகளுக்கு நீக்கி பாஜக அதிரடி உத்தரவிட்டுள்ளது. 

இது தொடர்பாகக் கர்நாடக பாஜகவின் ஒழுங்கு நடவடிக்கைக் குழுத் தலைவர் லிங்கராஜ் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "கட்சியின் அறிவுறுத்தலை மதிக்காமல், சிவமொக்கா லோக்சபா தொகுதியில் ஈஸ்வரப்பா சுயேச்சையாகப் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்து கட்சிக்குத் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளார். இது கட்சியின் கட்டுப்பாட்டை மீறும் செயலாகும். எனவே அவர் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் உடனடியாக விடுவிக்கப்படுகிறார். மேலும் அவர் ஆறு ஆண்டுகளுக்குக் கட்சியில் இருந்து நீக்கப்படுகிறார்” என்று கூறப்பட்டுள்ளது