முன்னாள் அமைச்சர்கள் விரைவில் தவெகவில் இணையவுள்ளனர்- செங்கோட்டையன்
வரும் 16ஆம் தேதி விஜய் பிரச்சாரம் தொடர்பாக ஈரோடு மாவட்டம் விஜயமங்கலம் அருகே சரளை பகுதியில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த இடத்தை தமிழக வெற்றி கழகத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் மற்றும் மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அதன் பின் பொதுக்கூட்டத்தில் பின்பற்ற வேண்டிய கட்டுப்பாடுகள் மற்றும் நிபந்தனைகள் அடங்கிய பட்டியலை போலீசார் செங்கோட்டையனிடம் வழங்கினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கே.ஏ.செங்கோட்டையன், “தமிழ்நாட்டில் முதன்முறையாக பொது இடத்தை தேர்வு செய்து நிகழ்ச்சி நடைபெறுகிறது. இது மற்ற மாவட்டங்களுக்கு வழிகாட்டியாக அமையும். 84 நிபந்தனைகள் போலீசார் கொடுத்துள்ளனர். வாகனத்தில் நின்றபடி விஜய் பேச உள்ளார். மொத்தமாக 25 ஆயிரம் பேர் பங்கேற்பார்கள். பாண்டிச்சேரி சிறிய மாநிலம் என்பதால் அங்கு க்யூஆர் நடைமுறை பின்பற்றப்பட்டது. ஆனால் பறந்து கிடக்கும் தமிழகத்திலும் கேரளாவிலும் இதனை நடைமுறைபடுத்த இயலாது. ஒவ்வொரு மாவட்டமாக நிகழ்ச்சி நடைபெறுகிறது. அந்தந்த மாவட்டங்களை சார்ந்தவர்கள் இங்கு வர வாய்ப்பு உள்ளது. ஒவ்வொரு இயக்கத்திற்கும் கருத்துக்களை சொல்வதற்கு உரிமை இருக்கிறது. தேர்தல் நெருங்க நெருங்க எப்படி கூட்டணி அமையும்? எந்த வகையில் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுப்பார்கள் என்பது அப்போதுதான் தெரியும். முன்னாள் அமைச்சர்கள் சிலர் இணையப் போகிறார்கள். அதை யார் என்று சொல்லிவிட்டால் அங்கு இடர்பாடுகள் ஏற்படும். விஜய் தனது முதல் சுற்று பயணத்திலேயே வாகனத்தில் மூன்று படங்கள் தெளிவாக இருக்கின்றன. பேரறிஞர் அண்ணா. விஜய் மற்றும் எம்ஜிஆர் ஆகியோரின் படங்கள் இணைந்து தான் வாகனத்தின் மையப்பகுதியில் வைக்கப்பட்டுள்ளது” என்றார்.


