“குதிரை பேரம் நடத்தியவர்களுக்கு விரைவில் உரிய தண்டனை கிடைக்கும்”- செங்கோட்டையன்
சென்னை என்பது தமிழ்நாட்டின் தலைநகரம் மட்டுமல்ல; சிறப்பு மிக்க, பொலிவான நகரமாகவும் சென்னையை உருவாக்க வேண்டும் என்பதுதான் முதலமைச்சரின் கனவு என அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

அண்ணா நகரில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு பூங்காவை திறந்து வைத்து, மரக்கன்றினை நட்டுவைத்தார் அமைச்சர் செங்கோட்டையன். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், “தவெக எம்.எல்.ஏக்களிடம் பேரம் பேசுவது வெட்கக்கேடானது. பேரம் பேசுவோருக்கு தக்க தண்டனை கிடைக்கும். குதிரை பேரம் நடத்தியவர்களுக்கு உரிய தண்டனை காவல்துறை மூலம் விரைவில் கிடைக்கும். முடிக்காத பணிகளை முடித்ததாகக் கூறி கல்வெட்டு வைத்தவர்கள், மு.க.ஸ்டாலினின் கல்வெட்டை ஒருவாரத்திற்குள் மீண்டும் வைக்கவில்லை என்றால் போராட்டம் நடக்கும் என்றக் கருத்தைக் கூறுவது வேடிக்கையாகவும் விந்தையாகவும் உள்ளது. இந்த ஆட்சிக்கு பல்வேறு கருத்துகளைச் சொல்ல வேண்டியவர்கள், எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்துகொண்டு குதிரைப் பேரம் நடத்துவது வெட்கக்கேடான விஷயம். சென்னை என்பது தமிழ்நாட்டின் தலைநகரம் மட்டுமல்ல. சிறப்பு மிக்க, பொலிவான நகரமாகவும் சென்னையை உருவாக்க வேண்டும் என்பதுதான் முதலமைச்சரின் கனவு.அனிதா ராதாகிருஷ்ணன் விளம்பரம் வேண்டுமென்று கருத்துக்களை கூறிவருகிறார். வலிமையான ஆட்சி அமைக்க எங்களுக்கு நல்ல கூட்டணி இருக்கும்போது அவர்களை அழைக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை” என்றார்.

