"எங்களால்தான் காங்கிரசுக்கு கூடுதல் சீட்டுகள் கிடைத்துள்ளது" - செங்கோட்டையன்
தமிழக வெற்றி கழகத்தினால் காங்கிரஸ் கட்சிக்கு கூடுதல் சீட் மற்றும் வாய்ப்புகளும், நன்மைகளும் கிடைத்துள்ளது என தவெக நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தவெக நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன், “நேற்று திமுகவுடன் காங்கிரஸ் கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழக வெற்றி கழகத்தினால் பலருக்கு நன்மை நடந்து கொண்டிருக்கிறது. இதை அப்படி தான் பார்க்க வேண்டும். தமிழக வெற்றி கழகத்தினால் காங்கிரஸ் கட்சிக்கு கூடுதல் சீட் மற்றும் வாய்ப்புகளும், நன்மைகளும் கிடைத்துள்ளது. தமிழக வெற்றி கழகத்தின் அடுத்த கட்ட நகர்வுகள் குறித்து எங்கள் தலைவர் விஜய் முடிவு எடுப்பார். தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தேர்தல் அறிக்கை தயாரிப்பு பணிகளை எங்கள் கட்சியின் தலைவர் விஜய் உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கிறார். விரைவில் தேர்தல் அறிக்கை முழுவதும் ஆராய்ந்து வெளியிடப்படும்.
அதிமுகவிலிருந்து பிரிந்து சென்ற சசிகலா,புகழேந்தி புதிய கட்சிகளை தொடங்கியுள்ளனர். புதிய கட்சியை தொடங்குவது அவரவர் விருப்பம். முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்தது வேதனைக்குரிய ஒன்று. அனைத்து கட்சிகளும் இன்னும் கூட்டணிகளையே இறுதி செய்யவில்லை, ஆனால் எங்களிடம் ஏன் வேட்பாளர்கள் இறுதி செய்யப்பட்டதாக ஏன் கேட்கிறீர்கள்? தமிழக வெற்றி கழக கட்சியின் அடுத்த மக்கள் சந்திப்பு பொதுக்கூட்டம் எந்த பகுதியில் நடத்த வேண்டும் என இன்னும் முடிவு செய்யப்படவில்லை. ஜெயக்குமாருக்கு அதிமுகவில் சீட் கிடைக்கப்போவதில்லை. அவர் வேண்டுமானால் TVKக்கு வரலாம். எதிர்கால தமிழகத்தை ஆளக்கூடியவர் தவெக தலைவர் தான் என்பதை இந்த நாடே அறிய இருக்கிறது.. எங்களை காட்டி கூடுதல் சீட் பெரும் நிலைதான் இருக்கிறது” என்றார்.

