"அனைத்தும் நன்மைக்கே"- டெல்லி பயணம் குறித்து செங்கோட்டையன் பதில்

 
ச்

அதிமுகவில் கே.ஏ.செங்கோட்டையன் மையமாக வைத்து அரசியல் பரபரப்பு நிலவி வரும் நிலையில், டெல்லி பயணம் குறித்த கேள்விக்கு, மௌனம் அனைத்தும் நன்மைக்கே என செங்கோட்டையன் பதிலளித்துள்ளார்.

2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக பாஜக கூட்டணி குறித்த பேச்சு வார்த்தை தொடங்கியுள்ள நிலையில் கடந்த வாரம் டெல்லி சென்று அமித்ஷாவை எடப்பாடி பழனிச்சாமி சந்தித்தார்.  கூட்டணி குறித்து பேசவில்லை என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தாலும் கூட்டணிக்கான பேச்சு என்பதை அமித்ஷா உறுதிப்படுத்தினார். அடுத்த சில தினங்களில் கே.ஏ. செங்கோட்டையன் ரகசியமாக டெல்லி சென்று நிர்மலா சீதாராமனை சந்தித்தது அரசியலில் பெரும் விவாதத்தை கிளப்பியது. 

இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களாக கோபிசெட்டிபாளையத்தில் தனது இல்லத்தில் தங்கி இருந்த கே.ஏ. செங்கோட்டையன் இன்று மீண்டும் டெல்லி செல்வதாக தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் சென்னை செல்வதற்காக ஈரோடு ரயில் நிலையத்திற்கு வந்த அவரிடம் செய்தியாளர்கள் சரமாரியாக கேள்வி எழுப்பினர். ஆனால் எதற்கும் பதில் அளிக்காமல் சிரித்தபடி மௌனமாக இருந்த செங்கோட்டையனிடம் தொடர்ந்து மௌனம் காப்பது ஏன் என கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர் "தனது மௌனம்  அனைத்தும் நன்மைக்கே" என பதில் அளித்துவிட்டு  கைகளை கூப்பி கும்பிட்டவாறு கடந்து சென்றார்.