இன்று 500-க்கும் மேற்பட்ட ஆதரவாளர்களுடன் தவெகவில் இணைகிறார் செங்கோட்டையன்..!

 
1 1

கே.ஏ.செங்கோட்டையன் நேற்று காலை சென்னை தலைமை செயலகம் சென்று சபாநாயகர் அப்பாவுவை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார். ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் அப்பாவு ஏற்றுக்கொண்டார். இதையடுத்து வெளியே வந்த செங்கோட்டையனிடம் அடுத்தகட்ட முடிவு பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், ‘‘இன்னும் ஒரு நாள் பொறுத்திருங்கள்'' என்று கூறினார்.

இந்நிலையில் த.வெ.க. வில் இணைய உள்ளதாக வெளியான தகவலை உறுதிப் படுத்தும் விதமாக சென்னை பட்டினப்பாக்கத்தில் விஜய் வீட்டுக்கு செங்கோட்டையன் மாலை சென்றார். த.வெ.க. நிர்வாகி ஆதவ் அர்ஜூனா காரில் அங்கு வந்த செங்கோட்டையன் விஜய்யை சந்தித்து சுமார் 2 மணி நேரம் தீவிரமாக ஆலோசனை நடத்தினார்.

இதையடுத்து அவர் முன்னாள் எம்.பி. சத்யபாமா உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்ட ஆதரவாளர்களுடன் விஜய் முன்னிலையில் த.வெ.க.வில் இன்று காலை 10 மணிக்கு இணைய இருக்கிறார். சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பனையூரில் இருக்கும் த.வெ.க. அலுவலகத்தில் இன்று செங்கோட்டையன் அக்கட்சியில் இணையும் விழா நடைபெற இருக்கிறது. இதனால் பனையூர் விஜய் கட்சி அலுவலகம் விழா கோலம் பூண்டுள்ளது. த.வெ.க.வில் செங்கோட்டையனுக்கு அவரது அரசியல் அனுபவத்தை கருத்தில் கொண்டு முக்கிய பதவி வழங்கப்பட உள்ளது. புதிதாக அமைப்பு பொதுச்செயலாளர் என்ற பதவி உருவாக்கப்பட்டு அந்த பொறுப்பில் செங்கோட்டையன் நியமிக்கப்படலாம் என்று தெரிகிறது.

செங்கோட்டையனை தொடர்ந்து புதுச்சேரி பாஜக முன்னாள் தலைவர் சாமிநாதன் இன்று தவெகவில் இணைகிறார். காரைக்கால் முன்னாள் எம்.எல்.ஏ ஹசனாவும் விஜய் முன்னிலையில் தவெகவில் இணைகிறார்.