ஈபிஎஸ் உடன் மட்டுமல்ல ஜெயலலிதாவுடனும் செங்கோட்டையனுக்கு மோதல்
எடப்பாடி பழனிசாமியுடன் மட்டுமல்ல ஜெயலலிதாவுடனும் செங்கோட்டையனுக்கு மோதல் இருந்ததாக கூறப்படுகிறது.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள குள்ளம்பாளையம் என்ற ஊரில் 9.1.1948.ம் ஆண்டு பிறந்தார். இவரது தந்தை- கே.எஸ்.அர்த்தனாரி, தாயார்- காளியம்மாள். இவர் SSLC வரை படித்துள்ளார். இவரது மனைவி ஈஸ்வரி. இவருக்கு கதிர் என்ற ஒரு மகன் உள்ளார். தனது இளம் வயதில் எம்ஜிஆர் மீது கொண்ட ஈர்ப்பின் காரணமாக அதிமுகவில் இணைந்தார் செங்கோட்டையன். அதிமுகவில் சேர்ந்த போதும் அவருக்கு எம்ஜிஆர் மன்ற மாவட்ட செயலாளர் பதவி முதன் முதலில் வழங்கப்பட்டது. கோவையில் அதிமுக பொது குழுவை நடத்த வேண்டிய பொறுப்பு முன்னாள் அமைச்சர் அரங்கநாயகம் மற்றும் திருப்பூர் மணிமாறனோடு சேர்ந்து செங்கோட்டையனிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த பொதுக்குழுவை செங்கோட்டையன் வெற்றிகரமாக நடத்திக் காட்டியதால் எம்ஜிஆர் உடன் மிகவும் நெருக்கமானார்.
இதனைத் தொடர்ந்து முதன் முறையாக 1977 ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் சத்தியமங்கலம் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கினார் எம்ஜிஆர். காங்கிரசின் கோட்டையாக இருந்த சத்தியமங்கலத்தில் அதிமுகவின் அறிமுக நபராக சத்தியமங்கலத்திற்கு அறிமுகமே இல்லாத செங்கோட்டையன் அங்கு போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதன் தொடர்ச்சியாக 1980 ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக கோபிசெட்டிபாளையம் தொகுதியில் அவர் போட்டியிட்டு வருகிறார். (1996 தேர்தலில் திமுக வேட்பாளர் வெங்கிடுவிடம் தோல்வியடைந்தார். 2001 போக்குவரத்து ஊழல் தொடர்பான வழக்கு காரணமாக போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை). அதிமுகவில் மூத்த தலைவர் என்ற அடையாளத்துடன் இருந்து வந்த முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கடந்த 1977ம் ஆண்டு எம்.ஜி.ஆர் முதன் முதலில் தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்ற போது, சத்தியமங்கலம் தொகுதியில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அதைத்தொடர்ந்து 1980, 1984, 1989, 1991, 2006, 2011,2016, 2021 ஆண்டுகளில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல்களில் கோபி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1991 முதல் 1996 வரை போக்குவரத்து மற்றும் வனத்துறை அமைச்சராகவும், 2011 முதல் 2012 ஜூலை வரை வேளாண்துறை மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராகவும், வருவாய்த்துறை அமைச்சராகவும், ஜெயலலிதா அமைச்சரவையில் பணியாற்றினார். அதைத்தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அமைச்சரவையில் 2017 முதல் 2021 வரை பள்ளி கல்வித்துறை அமைச்சராவகவும் பதவி வகித்து வந்தார். அதன் பின்னர் 2021 முதல் தற்போது வரை கோபி தொகுதி சட்டமன்ற உறுப்பினராகவும் உள்ளார். ஜெயலலிதா காலத்தில் தேர்தல் பிரச்சார பயண திட்டங்களை வகுப்பது, பிரச்சார கூட்டங்களை நடத்துவது குறித்து சிறப்பாக செயல்பட்டவர் என்று பெயர் பெற்றவர். எம்.ஜி.ஆர். மறைவிற்கு பின்னர் அதிமுக ஜெ அணி, ஜானகி அணி என இரு அணிகளாக பிரிந்த போது ,ஜெயலலிதா விற்கு துணையாக இருந்து அதிமுகவை மீட்பதில் பங்காற்றியவர் செங்கோட்டையன். அடிகள் பிரிந்திருந்த போது ஜெயலலிதா அணி சார்பில் சேவல் சின்னத்தில் போட்டியிட்டு கோபிச்செட்டிபாளையத்தில் வென்றார். அதைத்தொடர்ந்து கழக அமைப்பு செயலாளர் மற்றும் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் பொறுப்பிலும் இருந்து வந்தார். இந்நிலையில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கும், கே.ஏ.செங்கோட்டையனுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கட்சியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளார்.
ஜெயலலிதா இருந்த போது செங்கோட்டையனின் மனைவி ஈஸ்வரியும், அவரது மகன் கதிரீஸ்வரனும், ஜெயலலிதாவை சந்தித்து, “செங்கோட்டையன் வீட்டுக்கே வருவதில்லை (தனது உதவியாளர் வீட்டிலேயே உள்ளார்) என செங்கோட்டையனின் தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பாக புகார் கூறியதாகவும், இதையடுத்து ஜெயலலிதா, செங்கோட்டையனை அழைத்து மிகக் கடுமையாக எச்சரித்ததாகவும் அதிமுக வட்டாரத்தில் அப்போது பரபரப்பாக பேசப்பட்டது. இதன் காரணமாக 2016 டிசம்பர் 5.ல் ஜெயலலிதா மறைவு வரை அவர் அமைச்சரவை, கட்சி நிகழ்ச்சிகளில் புறக்கணிக்கப்பட்டார். அதன் பின் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சரான போது மீண்டும் அவருக்கு அமைச்சரவையி்ல் இடம் கிடைத்தது.


