“வீரமணி வழக்கில் முதல்வருக்கு சம்மன் அனுப்புங்க...”- திமுக மனு

 
ச்

ஜெம் கிரானைட் வீரமணி வழக்கில், திமுக மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ள முதலமைச்சர் விஜய், அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, சி.டி.ஆர். நிர்மல்குமார் ஆகிய மூவரையும் சம்மன் அனுப்பி விசாரணைக்கு அழைத்து, அவர்களிடம் உள்ள ஆதாரங்களைப் பெற வேண்டும் என சிறப்புப் புலனாய்வுக் குழுவிடம் டி.ஆர்.பாலு மனு அளித்துள்ளார்.

ஜெம் வீரமணி வழக்கில் சிறப்பு புலனாய்வு குழுவில் திமுக சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில், “முதலமைச்சர் விஜய், அமைச்சர்கள் ஆதவ், நிர்மல்குமார் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள் பொய்யானவை. இந்த மூவரிடமும் இந்தக் குற்றம் தொடர்பான மிக முக்கியத் தகவல்கள் உள்ளன. மூவரையும் சம்மன் அனுப்பி விசாரணைக்கு அழைத்து, அவர்களிடம் உள்ள ஆதாரங்களைப் பெற வேண்டும். போக்சோ சட்டத்தின் அடிப்படையில் ஆதாரங்களை போலீசிடம் ஒப்படைக்கவில்லை. ‘கேஸ் டைரி’யில் உள்ள விசாரணைத் தகவல்கள் அதிகாரபூர்வமற்ற முறையில் கிடைக்கிறது. ஆதாரங்கள் இருந்தால், அவற்றை இதுவரை விசாரணை அதிகாரிகளிடம் ஒப்படைக்காதது ஏன்?  குற்றச்சாட்டுகள் வேண்டுமென்றே பொய்யாக முன்வைக்கப்பட்டிருந்தாலோ, சட்டப்படி தெரிவிக்க வேண்டிய தகவல்கள் மறைக்கப்பட்டிருந்தாலோ, விசாரணை ரகசியங்கள் அனுமதியின்றி வெளியிடப்பட்டிருந்தாலோ, சம்பந்தப்பட்டவர்கள் மீது போக்சோ சட்டம் மற்றும் பாரதிய நியாய சன்ஹிதாவின் பொருந்தக்கூடிய பிரிவுகளின்கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். இக்குற்றத்தில் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும் தப்பிக்கக் கூடாது என்பதுதான் திமுகவின் உறுதியான நிலைப்பாடு . அதேவேளையில், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைப்பவர்கள் எத்தகைய உயர்பதவியில் இருந்தாலும், அவர்களையும் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.