'விளையாட்டு வீரர்களுக்கு செம ஜாக்பாட்!' – இனி விமான கட்டணம் முதல் உபகரணங்கள் வரை அரசே வழங்கும்..!
சென்னை அண்ணா சாலையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தமிழ்நாடு ஒலிம்பிக் அசோசியேஷன் நிர்வாகக் குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில் விளையாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கலந்து கொண்டார்.
கூட்டத்திற்கு பின்னர் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில், "தமிழகத்திற்கு ஒலிம்பிக் பதக்கம் கிடைக்கவில்லை. அடுத்த ஒலிம்பிக்கில் தமிழகம் நிச்சயம் பதக்கத்தை பெற என்னென்ன நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பது குறித்து இந்தக் கூட்டத்தில் ஆலோசித்தோம்.
தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கத்திற்கு இதுவரை அலுவலகம் இல்லை. அதை கட்டுவது குறித்து ஆலோசித்து வருகிறோம். நேரு உள்விளையாட்டு அரங்கில் மாநில அளவில் நடக்கும் போட்டிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். விளையாட்டு சங்கங்கள் சார்பாக நேரு விளையாட்டு அரங்கில் நடைபெறும் போட்டிகளுக்கு இனி கட்டணம் இனி வசூலிக்கப்பட மாட்டாது.
மேலும், விளையாட்டு வீரர்களுக்கான ரயில் கட்டணம், தமிழ்நாடு அணிக்காக பிற மாநிலங்களுக்கு செல்லும் வீரர்களுக்கான விமான கட்டணத்தை இனி அரசே செலுத்தும். அதேபோல, தமிழ்நாடு அணிக்காக விளையாடும் விளையாட்டு வீரர்களுக்கு ஜெர்ஸியில் இருந்து உபகரணங்கள் வரை அனைத்தையும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையமே (SDAT) கொடுக்கும்.
தேசிய மற்றும் சர்வதேச அளவில் விளையாடும் வீரர்களுக்கு மூன்று மாதங்களுக்கு ஒரு முறை ஊக்கதொகை வழங்க உள்ளோம். போலி பயிற்சியாளர்களால் தான் போக்சோ தொடர்பான குற்றங்கள் நடக்கின்றன. அதற்காக தான், விளையாட்டு பயிற்சியாளர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை வழங்க முடிவு செய்துள்ளோம்.
ஆண்டுக்கு 300 முதல் 400 வரையிலான விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். மகளிருக்கென தனியாக முதலமைச்சர் கோப்பை போட்டிகள் நடந்த திட்டமிட்டு உள்ளோம்.
கல்லூரி மாணவர்கள் மத்தியில் போதைப் பழக்கம் அதிகமாக உள்ளதால், கல்லூரிகளலும் உடற்பயிற்சி வகுப்புகளை கொண்டு வர திட்டமிட்டு உள்ளோம்" என ஆதவ் அர்ஜுனா கூறினார்.

