பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்து திமுகவில் இருந்து விலகினார் செல்வராஜ்

 
ச்

திருப்பூர் திமுக மத்திய மாவட்ட செயலாளரும், முன்னாள் திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான செல்வராஜ் திமுகவில் இருந்து விலகுவதுடன், தீவிர அரசியலில் இருந்து ஒதுங்குவதாக அறிவித்துள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய செல்வராஜ்,"திருப்பூரில் 1976 ஆம் ஆண்டு தொழிற்சங்கத்தில் சேர்ந்து பணியாற்றினேன். அதன் பிறகு திமுக நகர செயலாளராக பணியாற்றினேன். தொடர்ந்து, மேயராகவும், மாவட்ட செயலாளராகவும், சட்டமன்ற உறுப்பினராகவும் பணியாற்றினேன். 50 ஆண்டுகளாக கழகத்திற்காக பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்துள்ளேன். இருப்பினும், 2025 முதல் மற்ற கட்சியில் இருந்து வந்தவர்களுக்கு அதிகாரம் வழங்கப்படுகிறது. இது எனக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தியது. பல கட்சிகளிலிருந்து எனக்கு அழைப்புகள் வந்தன. ஆனால் நான் செல்லவில்லை. தொழில் அதிபர் டாலர் பாலசுப்பிரமணியனின் அழுத்தத்தின் பேரில், திருப்பூர் மேயராக இருந்த தினேஷ் குமாருக்குத் திருப்பூர் தெற்கு தொகுதி ஒதுக்கப்பட்டது. நான் விருப்ப மனு அளிக்காத பல்லடம் தொகுதிக்கு என்னைப் போட்டியிடச் சொன்னார்கள். இருந்தாலும் கழகத்தின் சொல்லை ஏற்று தேர்தல் பணி செய்தேன். ஒரு தொழில் அதிபர், மற்ற கட்சியில் இருந்து வந்தவருக்கு இருக்கும் அதிகாரம், கழகத்திற்காக உழைத்த எனக்கு இல்லை என்பதை நினைக்கும்போது மிகவும் மன அழுத்தம் ஏற்பட்டது.

ஆதிக்க சக்தியின் பிடியில் கட்சி இருப்பதை உணர்த்தவே இந்த முடிவு. இஸ்லாமிய மக்களுக்கு கபர்ஸ்தான் வழங்க விடாமல் தடுத்துவிட்டார் டாலர் சுப்பிரமணியன். அதில் இருந்து தான் எங்களுக்குள் பிரச்சனை. தலைவர் திருப்பூர் வந்தால் அவர் வீட்டில் தங்குவதை பயன்படுத்தி என்னை ஓரங்கட்டியுள்ளார். எதிர்காலத்தில் திமுகதான் ஆட்சிக்கு வரும். தளபதி ஸ்டாலின்தான் முதல்வர் ஆவார். அதற்கு நான் என்னைப் பலி கொடுக்கிறேன். இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டுமென்றால், பல்லடம் தொகுதியிலும் இளைஞரை நிறுத்தியிருக்கலாம். ஏன் என்னை நிறுத்தினார்கள்? எனவேதான் கழகத்தின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் அடிப்படை உறுப்பினர் பதிவிலிருந்தும் விலகிக் கொள்கிறேன். வேறு எந்தக் கட்சிக்கும் செல்லும் எண்ணம் எனக்கு இல்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். கழகத்திற்கு உண்மையாக இருக்கும் நபருக்காக, அடிப்படை உறுப்பினராக இல்லாவிட்டாலும் வேலை செய்வேன்” என்றார்.